கூட்டணிக்காக மக்கள் பிரச்னையை விடமாட்டோம்: பாலகிருஷ்ணன் 'கருத்து'
கூட்டணிக்காக மக்கள் பிரச்னையை விடமாட்டோம்: பாலகிருஷ்ணன் 'கருத்து'
ADDED : ஆக 12, 2025 04:03 AM

கடலுார்: ''மக்களை பாதிக்கும் பிரச்னைகளில், தமிழக அரசை எதிர்த்து போராடுவோம்,'' என, மா.கம்யூ., அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கூறினார்.
கடலுாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை படுகொலை செய்வது தொடர்கிறது. முந்தைய நிலைமையை காட்டிலும் இப்போது அதிகரித்துள்ளது.
ஆணவ கொலையை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வந்து, குற்றம் இழைப்போருக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே, இந்த மாதிரியான குற்றங்கள் குறையும். அதுவரை, ஆணவ கொலைகள் நடந்து கொண்டு தான் இருக்கும்.
எது எதுக்கோ திட்டங்களை கொண்டு வரும் தமிழக அரசு, ஆணவ கொலைகளை தடுக்க சட்டம் கொண்டு வராமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை..
சில காலம் முன், பா.ஜ.,வை மிகக் கடுமையாக எதிர்த்து வந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மீண்டும் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த பின், அக்கட்சி எதைச் செய்தாலும், அதற்கு ஒத்து ஊதும் நிலைப்பாட்டுடன் செயல்படுகிறார். 'கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் முகவரியை இழந்து விட்டன; தி.மு.க.,வின் அடிமை கட்சிகளாகி விட்டன' என்றெல்லாம் விமர்சிக்கிறார்.
உண்மையில், பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்ததன் வாயிலாக, தன் சொந்த முகவரியை இழந்திருப்பது பழனி சாமியும், அ.தி.மு.க.,வும் தான்.
பா.ஜ.,வை வீழ்த்தும் கூட்டணியில் தான் நாங்கள் இடம் பெற்றிருக்கிறோம். அதற்காக, தி.மு.க., அரசு, மக்களை பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், துணிச்சலோடு அரசை எதிர்த்து போராடுவோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து என்றைக்கும் மாற மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.