தி.மு.க., கூட்டணியில் இருப்பதால் அமைதியாக இருக்க மாட்டோம்: திருமா
தி.மு.க., கூட்டணியில் இருப்பதால் அமைதியாக இருக்க மாட்டோம்: திருமா
ADDED : ஆக 16, 2025 03:59 AM

மதுரை: விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மதுரையில், நேற்று அளித்த பேட்டி:
ஜி.எஸ்.டி., வரியை குறைத்து அறிவிப்பு வெளியிடப்படும் என, பிரதமர் மோடி அறிவித்ததில் மகிழ்ச்சி. இது தேர்தலுக்கானதாக இருந்தாலும் வரவேற்கலாம்; பாராட்டலாம். ஜி.எஸ்.டி., முறையை முற்றிலும் கைவிட வேண்டும். பிரதமர் ஒரு ஆர்.எஸ்.எஸ்., தயாரிப்பு.
அதனால், அவர் சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ்.,ஐ பாராட்டியது ஏற்புடையதல்ல.
தங்கள் உரிமைக்காக போராடிய துாய்மை பணியாளர்களை நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கைது செய்ய வேண்டிய தேவை இல்லை. போராட்டம் துவங்கிய நான்காவது நாளில், துாய்மைப் பணியாளர்களை சந்தித்துப் பேசினேன்.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நேரு, தொடர்பு உடைய அரசு அதிகாரி களையும், இது தொடர் பாக சந்தித்து பேசினேன்.
ஆனால், இந்த உண்மை எதுவுமே தெரியாமல், துாய்மை பணியாளர்களை, எனக்குப் பின்னால் சென்று சந்தித்தவர்களெல்லாம், இந்த விஷயத்தில் என்னையும், எங்கள் இயக்கத்தையும் விமர்சிப்பது வேடிக்கையானது.
துாய்மை பணியாளர் பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக, தி.மு.க., கூட்டணியை உடைக்க முடியுமா எனப் பார்க்கின்றனர்.
துாய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க., ஏன் போராட்டம் நடத்தவில்லை? கைது செய்த பின், அவர்கள் பிரச்னையை பேசியிருக்கிறார் பழனிசாமி.
அ.தி.மு.க., ஆட்சியில்தான் துாய்மைப்பணி தனியார் மயப்படுத்தப்பட்டது. இப்போது போராட்டம் நடத்துபவர்கள் அ.தி.மு.க., தனியார் மயப்படுத்தியதைப் பற்றி ஏன் பேசவில்லை? அ.தி.மு.க., செய்தால் அமைதியாக இருக்க வேண்டும்.
தி.மு.க., செய்தால் எதிர்க்க வேண்டும் என்பது என்ன அரசியல் இது.
தி.மு.க., கூட்டணியில் இருப்பதால், இந்த விஷயத்தில் திருமா அமைதியாக இருந்துவிடுவார் என பலரும் நம்புகின்றனர். ஆனால், நாங்கள் தான் அவர்களுக்காக குரல் கொடுக்கிறோம். அரசின் முரட்டுத்தனத்தை எதிர்க்கிறோம்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.