ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தெரிவித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுப்போம்
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தெரிவித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுப்போம்
ADDED : மார் 09, 2024 03:36 AM

கோவை: ''லோக்சபா தேர்தலில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை ஆதாரத்துடன் தெரிவித்தால், 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹு உறுதியளித்தார்.
லோக்சபா தேர்தல் முன்னேற்பாடு குறித்த ஆய்வு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்குப் பின், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹு, நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தலில் நகர்ப்புறங்களில் ஓட்டுப்பதிவு குறைகிறது. ஓட்டுப்பதிவு குறையும் ஓட்டுச்சாவடிகளை கண்டறிந்து, தீர்வு காணப்படும். இம்முறை கண்டிப்பாக ஓட்டுப்பதிவு அதிகரிக்கும்.
பணம், டோக்கன், பரிசு பொருட்கள் வழங்கினால், 'சி-விஜில்' மொபைல் செயலியில் புகைப்படம் அல்லது வீடியோவாக, பொதுமக்கள் அனுப்பினால், 100 நிமிடங்களில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
வருமானத்துறை, வணிக வரித்துறை, காவல்துறை, சுங்க வரித்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளையும் இணைத்து நடவடிக்கை எடுக்க, இ-எஸ்.எம்.எஸ்., அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் வந்த புகார்கள் குறித்து விசாரித்து, கோர்ட் மூலமாக தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களின் தேர்தல் செலவை கண்காணிக்க, செலவின கணக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது; இவர்கள் 'ரிப்போர்ட்' கொடுப்பார்கள்; மக்களும் 'ரிப்போர்ட்' கொடுத்தால், நடவடிக்கை எடுக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கென, 'சக் ஷம்' என செயலி இருக்கிறது; அவர்களுக்கு என்னென்ன தேவை என தெரிவிக்கலாம். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று ஓட்டுகளை பதிவு செய்ய, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஓட்டுச்சாவடி அலுவலர்களும் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களின் விருப்பத்தை அறிந்து, மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பர்.
85 வயதுக்கு மேற்பட்டோரின் வீடுகளுக்குச் சென்று, தபால் ஓட்டுப்பதிவு செய்யும்போது, நேர்மையான ஓட்டாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, போலீஸ் அதிகாரிகள் உடன் செல்வர்; வீடியோவில் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட வாக்காளரே ஓட்டை பதிவு செய்கிறாரா என்பது உறுதி செய்யப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

