தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ வலை வளை: துந்தனா துந்தனா துந்தனா

 வலை வளை: துந்தனா துந்தனா துந்தனா

 வலை வளை: துந்தனா துந்தனா துந்தனா

3


UPDATED : செப் 14, 2026 04:24 AM

ADDED : செப் 14, 2026 03:38 AM

Follow on GoogleFavourite on Google

3

UPDATED : செப் 14, 2026 04:24 AM ADDED : செப் 14, 2026 03:38 AM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாடியதால் பறிபோனது வேலை


கொல்கட்டாவை சேர்ந்த இசை ஆசிரியர் ஷோவன் சக்கரவர்த்தி, 40, கொரோனா தொற்று காலத்தில் வேலை இழந்து, செக்யூரிட்டி பணியில் சேர்ந்தார். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா? நண்பர் ஒருவர் வீடியோ எடுப்பதாக கூறியதால், ரவீந்திர சங்கீத பாடல் பாடினார் ஷோவன். செக்யூரிட்டி சீருடையில் அவர் அட்டகாசமாக பாடும் அந்த வீடியோ, வலைதளங்களில் பரவியது; கூடவே சிக்கலும் வந்தது.

'நீ செக்யூரிட்டி வேலை பார்க்கத்தானே வந்தாய், பாட்டுப்பாடுவதா உன் வேலை' என்று கூறி, அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டனர். வீட்டில் முடங்கிய ஷோவன் பற்றிய செய்திகள் டிரெண்டிங் ஆயின. இணையத்தில் கிளம்பிய ஆதரவால் இசைப்பயிற்சிக்கு மாணவர்கள் சேர்ந்தனர்.

வேலையை விட்டு நீக்கிய ஹவுசிங் சொசைட்டியும் உதவ முன் வந்தது; அதை ஏற்க மறுத்து விட்ட ஷோவன், 'பணியில் இல்லாத நேரத்தில் பாட்டுப் பாடியதற்காக, வேலை பறிபோகும் என்பதை ஏற்க முடியவில்லை; பாடுவது குற்றமா' என்கிறார்.

அதட்டிய டிரைவர்; அதிர்ச்சியில் பயணி


குருகிராமில் இருந்து டில்லிக்கு ஊபர் டாக்சியில் சென்ற பெண், டிரைவர் போனில் பேசிக்கொண்டே இருப்பதையும், வழி மாறிச் செல்வதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும், 'பேசாமல் உட்கார்ந்திருங்கள்' என்று அந்த டிரைவர் அதட்டியுள்ளார்.

'மொபைல் செயலியில் இருக்கும் டிரைவரின் படமும் பெயரும் வேறு, உண்மையில் டாக்சி ஓட்டுபவரின் பெயரும், படமும் வேறாக இருந்தன. பெண்கள் பாதுகாப்பு பெரும் கவலையாக இருக்கிறது. ஏன் இப்படி ஆள் மாறாட்டம் செய்ய அனுமதிக்கிறீர்கள்' என்று ஆஞ்சலிகா அரிபம் என்ற பெண் வலைதளத்தில் வெளியிட்ட பதிவு, வேகமாக பரவியது. இதைக்கண்ட வலைதள பிரியர்கள், தங்களது மோசமான அனுபவங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

துந்தனா துந்தனா துந்தனா



'வாடகை சோபா 20 ரூபாய்; விலைக்கு வாங்கினால் 30 ரூபாய்' என்ற சினிமா பாடல் வரிகளுக்கு உதாரணம் கூறுவது போல் இருக்கிறது, ஹைதராபாதில் நிகழ்ந்த சம்பவம். ஜீவி என்பவர், பஞ்சாரா ஹில்ஸ் பஞ்சக்கட்டு தோசை உணவகத்தில் சென்று சாப்பிட்டபோது, நெய் காரம் ஆனியன் தோசை 104 ரூபாய், நெய் பொங்கல் 85 ரூபாய், பில்டர் காபி 28 ரூபாய், ஜி.எஸ்.டி., சேர்த்தால் 230 ரூபாய் என பில் வந்தது.

அதே உணவுப்பண்டங்களை, ஸ்விகி ஆன்லைன் செயலியில், அதே உணவகத்தில் சோதித்தபோது, விலை அதிகமாக காட்டியது. நெய் காரம் ஆனியன் தோசை 149 ரூபாய், நெய் பொங்கல் 115 ரூபாய், பில்டர் காபி 120 ருபாய், ஜி.எஸ்.டி.,யும் சேர்த்தால், மொத்தம் 436 ரூபாய் என காட்டியது.

ஆன்லைனில் ஆர்டர் செய்வதற்கும், நேரில் சென்று சாப்பிடுவதற்கும் இருக்கும் வித்தியாசம் என்று வெளியான இந்த பதிவை ஆதரித்தும், எதிர்த்தும் பலர் கமென்ட் செய்கின்றனர். 'வீட்டில் சமைத்தால் அதுவும் மிச்சம்' என்கின்றனர், வலைதளவாசிகள்.

'டிரெண்டிங்'கில் மலேஷிய பிரதமர்


டில்லி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், கிஷோர் குமாரின் எவர்கிரீன் ஹிட் ஹிந்தி பாடல் பாடிய வீடியோவை வெளியிட்டார். 1965ல் தேவ் ஆனந்த் நடிப்பில் வெளியான, தீன் தேவியன் படத்தில் இடம் பெற்ற 'கவாப் ஹோ தும் ய கோய் ஹக்கீகத்' என்ற அந்த பாடலை அவர் பாட, இன்னொருவர் பியானோ வாசிக்கிறார்; அருகில் அதிகாரிகள் ரசித்தபடி நின்றிருந்தனர். இன்ஸ்டாகிராமில் இப்ராஹிம் வெளியிட்ட அந்த வீடியோ, டிரெண்டிங் ஆனது. வலைதள பிரியர்கள் பலர், அவரது பாடும் திறமைக்கு சபாஷ் போட்டு வருகின்றனர்.

ஏன் இந்த இரட்டை வேடம்?


டில்லியில் இருந்து உதய்பூர் செல்லும் விமானத்துக்கு காத்திருந்த மொஹித் சிங், வெளிநாட்டினர் சிலர் ஆடிப்பாடி வீடியோ எடுப்பதை கண்டார். அவர் வெளியிட்ட வீடியோவில், 'வெளிநாட்டினர் விமான நிலையத்தில் ஆடிப்பாடினால் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், ஒரு இந்தியர், ஏதேனும் ஒரு வெளிநாட்டில் இப்படி செய்தால் என்ன நடக்கும்? நாகரிகம் அற்ற செயல் என்று பலரும் கூறுவர்.

செய்பவர் யார், செய்யுமிடம் எது என்பதைப் பொறுத்தே, செயல்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. பொது இடத்தில் ரீல்ஸ் எடுப்பதில் தவறில்லை; பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் தான் பிரச்னை. இதே செயலை இந்தியர்கள் செய்திருந்தால் எதிர்வினைகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும். இது வெறுப்பில்லை; வெறும் கருத்து மட்டுமே' என்கிறார், மொஹித் சிங். 'அவர் சொன்னது சரிதான்' என்கின்றனர், பெரும்பாலான வலைதளவாசிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us