தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ வாசகர்களின் கேள்விகளுக்கு அந்துமணி பதில்கள்

 வாசகர்களின் கேள்விகளுக்கு அந்துமணி பதில்கள்

 வாசகர்களின் கேள்விகளுக்கு அந்துமணி பதில்கள்


UPDATED : செப் 14, 2026 03:57 AM

ADDED : செப் 14, 2026 03:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 14, 2026 03:57 AM ADDED : செப் 14, 2026 03:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கே.சங்கர், சென்னை:


அமெரிக்க அதிபர் டிரம்ப், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப் போகிறாராமே?

கொடுக்கட்டும் கொடுக்கட்டும்... நம்மூரில் 'கொடுத்தவர்கள்' அனைவரையும், நம் மக்கள் சட்டென ஓரங்கட்டவில்லையா... அது போல, அமெரிக்க மக்களும் அதைச் செய்வர் என நம்புவோம். டிரம்ப், சூரியனுக்குப் போய், 'செட்டில்' ஆகட்டும்!

ராம் மோகன், திருவள்ளூர்:


'கர்நாடக அரசு நிகழ்ச்சிகளில், 'வந்தே மாதரம்' பாடலின் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்பட வேண்டும். ஜனாதிபதி, பிரதமர், கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. அங்கு முழுமையாக பாடலாம்' என, காங்.,கைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறி இருக்கிறாரே?

மிகவும் கெட்டிக்காரராக இருக்கிறார், கர்நாடக முதல்வர். தான் சார்ந்த கட்சியையும் திருப்தி அடையச் செய்து, மத்திய அரசையும் பகைத்துக் கொள்ளாமல், 'ஸ்மார்ட்'டாக செயல்படுகிறார்.

இ.நாகராஜன், சாத்துார்:


'மிசா காலத்தில் கைது செய்யப்பட்டதற்கான தழும்பை அடையாளமாகக் கொண்ட தலைவர் ஸ்டாலின் மட்டும் தான்' என்று, தி.மு.க., கூறுகிறதே?

'மிசா' கைதெல்லாம், உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டத்தின் கீழ் அமல்படுத்தப்படுவது; இதை, தியாகம் என்றெண்ணி புளகாங்கிதம் அடைந்து, தழும்பு ஏற்பட்டதாக பெருமை பேசுகின்றனர். இன்றைய இளைய தலைமுறையினருக்கு எல்லாமே புரிகிறது; இந்த பெருமையைக் கேட்டு, சிரிப்பாய் சிரிக்கின்றனர்!

கல்யாணராமன், சென்னை:


உங்களிடம் கேள்வி கேட்டால், பதில் பெற கிட்டத்தட்ட எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும் அந்துமணி?

அது நீங்கள் கேட்கும் கேள்வியை பொருத்தது கல்யாணராமன். ஆக்கப்பூர்வமான கேள்விகளை கேளுங்கள்; உடனே பதில் கிடைக்கும்!

ஆர்.பிரேம்குமார், சென்னை:


சட்டசபையை நடத்த விடாமல் செய்யும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நபர்களின் சம்பளத்தை, 'கட்' செய்து, துாய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினால் என்ன?

அருமையான யோசனை. அதை எல்லா கட்சிகளுக்கும் சேர்த்து சட்டம் கொண்டு வரலாம்!

வீ.கணேஷ், மதுரை:


ரஷ்ய அதிபர் புடினுக்கு, நம் பிரதமர் மோடி, திருக்குறள் புத்தகம் பரிசளித்துள்ளாரே?

அதுவும் எப்படி... ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம். திருக்குறளின் முக்கியத்துவத்தையும் விளக்கிக் கூறியுள்ளார் மோடி. நாடு, மொழி என்று அனைத்தையும் கடந்து பிரகாசிக்கும் தன்மை, திருக்குறளுக்கு உண்டே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us