ADDED : செப் 06, 2026 03:42 AM

நல்ல மனிதர்கள்
பெங்களூருவில் வேலை பார்க்கும் ஹர்ஷித், முதுகில் அணியும் பையை அணிந்தபடி, மழையில் டூ - வீலரில் பயணித்தார். பாதி வழியில் அவர் அணிந்திருந்த பையில் இருந்த 'லேப்டாப்' தவறி விழுந்துவிட்டது. அத்துடன் டைரி, வேறு சில பொருட்களும் விழுந்துவிட்டன.
வீடு சென்று சேர்ந்த பிறகு தான், இவையெல்லாம் விழுந்தது தெரிந்தது. வேறு வழியின்றி தான் வந்த பாதையிலேயே திரும்பிச் சென்றார்.
வழியெங்கும் விசாரித்தபடியே சென்றபோது, ஒரு ஆட்டோ டிரைவர் அதை எடுத்துச் சென்றதாக ஒருவர் கூறினார். அப்போதுதான், லேப்டாப்பில் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் யூ டியூப் பக்கங்களின் ஸ்டிக்கர் ஒட்டியது ஞாபகத்துக்கு வந்தது.
சந்தேகத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு சென்று பார்த்தபோது, குறிப்பிட்ட அந்த ஆட்டோ டிரைவர், இன்ஸ்டா பக்கத்துக்கு தன் போன் நம்பரை அனுப்பி இருந்தார். போன் செய்து பேசி, நேரில் அவரைப் பார்த்து லேப்டாப்பை பெற்றுக் கொண்டார் ஹர்ஷித்.
தான் செய்த உதவிக்கு சன்மானம் எதுவும் பெற மறுத்துவிட்டார் அந்த ஆட்டோ டிரைவர். 'இந்த உலகில் இன்னும் நல்ல மனிதர்களும் இருக்கின்றனர்' என்று கூறியிருக்கும் ஹர்ஷித் வீடியோ, இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
வெங்காயத்துடன் வந்த பீடி
'சொ மாடோ' தளத்தில் பிரியம் தஹாபில்டர் என்பவர் பாவ் பாஜி, நறுக்கிய வெங்காயம் ஆர்டர் செய்திருந்தார். அவையும் வந்து சேர்ந்தன. அதில்,
நறுக்கிய வெங்காயத்தில் இருந்த ஒன்றைக் கண்டதும் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆம், அது ஒரு பீடி.
'பாவ் பாஜி ஆர்டர் செய்த எனக்கு இலவசமாக ஒரு பீடி வந்திருந்தது. அது யாரோ ஒருவர் புகைத்த பீடி. நிச்சயமாக இது போன்ற ஒன்றை நான் இலவசமாக எதிர்பார்க்கவே இல்லை' என்று அவர் கூறியிருந்தார்.
அவரது பதிவு இணையத்தில் வேகமாக பரவியதை கண்ட பலரும், தங்கள் மோசமான அனுபவத்தை கொட்டி தீர்த்தனர். தனது புகாரை பார்த்த சொமாடோ, அடுத்த ஆர்டருக்கு நுாறு ரூபாய் கூப்பன் இலவசமாக அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார் பிரியம்.
இப்படியும் ஒரு உபயோகம்
உ. பி., நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள், ஒன்றாக மதிய உணவு சாப்பிட ஆரம்பித்தனர். அப்போது நண்பர்களில் ஒருவர், தானும் உணவு கொண்டு வந்திருப்பதாக கூறினார். அவரிடம் டிபன் பாக்ஸ் எதுவும் இல்லை. மொபைல் போன் பாக்ஸ் மட்டுமே இருந்தது. அந்த பாக்ஸை அவர் திறக்க, நண்பர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பார்த்தனர். அதில், சப்ஜி அடைத்துக் கொண்டு வந்திருந்தார் அந்த நண்பர்.
இதைக் கண்டதும் அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். ஆனந்தராஜ் என்பவர் இணையத்தில் வெளியிட்ட இந்த வீடியோ, நெட்டிசன்களின் கேலி கிண்டல் நிறைந்த கமென்ட்களுக்கு வழி வகுத்தது. 'ஓஎல்எக்ஸ்'சில் போன் விற்பனை செய்பவர்கள், 'நோ பாக்ஸ்' என்று குறிப்பிடுவதன் காரணம் இதுதான் போலிருக்கிறது என்கிறார் நெட்டிசன் ஒருவர்.
நதியை சுத்தம் செய்த மாணவருக்கு மெகா வாய்ப்பு
ம. பி., மாநிலத்தில் மாசுபட்ட அஜ்னார் நதியை சுத்தப்படுத்திய பிட்டு தபாஹி என்ற, 20 வயது மாணவன் பற்றிய செய்தி, சில நாட்களுக்கு முன் உலகளவில் இணையத்தில் பரவியது.
இதைக்கண்ட 'ஓஷன் கிளீனப்' என்ற சர்வதேச நிறுவனத்தின் நிறுவனர் பாயன் ஸ்டார்ட், பிட்டுவை நெதர்லாந்தில் தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
இதைக் கண்ட நெட்டிசன்கள், 'பிட்டுவுக்கு வாழ்நாள் வாய்ப்பு வந்துள்ளது, அவர் தவற விடக்கூடாது' என்று கமென்ட் செய்து வருகின்றனர்.
