நீங்கள் எழுதிய கடிதங்களால் மீனவருக்கு கிடைத்த நன்மை என்ன? ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி
நீங்கள் எழுதிய கடிதங்களால் மீனவருக்கு கிடைத்த நன்மை என்ன? ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி
UPDATED : பிப் 17, 2026 02:36 PM
ADDED : பிப் 17, 2026 06:06 AM

சென்னை: 'தமிழக மீனவர்களை மீட்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தால், என்ன நன்மை கிடைத்தது?' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்னரும், ஒன்பது தமிழக மீனவர்களை மீட்க, மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது. அந்த மீனவர்களை, மிரிஹானா தடுப்பு முகாமில், இலங்கை அரசு அடைத்து வைத்துள்ளது. இதனால், மீனவர்களின் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிக்காமல் இருக்க, எவ்வித ஆக்கப்பூர்வ நடவடிக்கையையும் மத்திய - மாநில அரசுகள் செய்யவில்லை.
முதல்வர் ஸ்டாலின் வழக்கம்போல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டு, அமைதி காப்பது கொடுமை. கடந்த ஐந்தாண்டுகளாக கடிதங்களை மட்டுமே ஸ்டாலின் எழுதியதில், என்ன நன்மை கிடைத்தது?
இலங்கை நீதிமன்றம் விதிக்கும் அபராதத்தை செலுத்தி, தமிழக மீனவர்களை மீட்பதில் என்ன தயக்கம்; அதிக எம்.பி.,க்களை வைத்திருந்தும், மீனவர் நலன் காக்க எடுத்த நடவடிக்கை என்ன?
இனியாவது, இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களுக்கான அபராதத் தொகையை செலுத்தி, அவர்களை மீட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

