திமுக எம்பிக்கள் செயல்பாடு: விவரம் சேகரிக்குது அதிமுக
திமுக எம்பிக்கள் செயல்பாடு: விவரம் சேகரிக்குது அதிமுக
UPDATED : ஆக 17, 2025 09:00 AM
ADDED : ஆக 17, 2025 02:23 AM

புதுடில்லி: அ டுத்தாண்டு ஏப்ரலில், தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க., அரசு பல திட்டங்களை அறிவித்து, மக்களை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறது. பழனிசாமி, அ.தி.மு.க.,விற்காக தமிழகம் முழுதும் அதிரடியாக பிரசாரம் செய்து வருகிறார்.
இதற்கிடையே, தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் மக்களுக்கு என்ன செய்தனர் என்பது குறித்து விபரங்களை சேகரித்து வருகிறது அ.தி.மு.க.,வின் டில்லி அலுவலகம்.
லோக்சபாவில், 40 தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் பார்லிமென்டில் எப்படி செயல்பட்டனர்; எத்தனை கேள்விகள் கேட்டனர்; தொகுதி மக்களுக்கு என்ன செய்தனர்; டி.ஆர். பாலுவிற்கும், கனிமொழிக்கும் இடையே என்ன பிரச்னை; உதயநிதி ஆதரவு எம்.பி.,க்களுக்கும், மற்ற தி.மு.க., - எம்.பி.,க்களுக்கும் உள்ள பிரச்னைகள் என, பல விபரங்களை விரைவில் அ.தி.மு.க., வெளியிட உள்ளதாம்.
மேலும், 2019ல் 39 எம்.பி.,க்கள் தி.மு.க., கூட்டணியில், பார்லிமென்டில் இடம் பெற்றிருந்தனர். 'இவர்கள் என்ன செய்தனர், இவர்களால் மக்களுக்கு பயன் உண்டா?' என்கிற விபரங்களையும் அ.தி.மு.க., தயாரித்து வருகிறதாம்.
இவை அனைத்தும், ஒரு சிறிய கையேடு புத்தகமாக அச்சிட்டு, பிரசாரத்தின்போது அ.தி.மு.க., மக்களுக்கு வழங்க உள்ளதாம்.