பாம்பன் புதிய பாலத்திற்கு என்னாச்சு? ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணி ரத்து
பாம்பன் புதிய பாலத்திற்கு என்னாச்சு? ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணி ரத்து
UPDATED : ஜன 18, 2025 07:36 AM
ADDED : ஜன 18, 2025 01:23 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், பாம்பன் கடலில் ரயில் பாலம் பலமிழந்த நிலையில், 2022 நவ., 23 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து ரத்தானது.
இதற்கு முன்பே 2020ல் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி துவக்கப்பட்டு, தற்போது 100 சதவீதம் பணிகள் முடிந்து டிசம்பரில் திறப்பு விழாவுக்கு தயாராக இருந்தது.
கடந்தாண்டு நவ.,13, 14ல் புதிய பாலத்தை ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி ஆய்வு செய்ததில், பாலத்தின் இரும்பு கர்டர்கள் மற்றும் துாக்கு பாலத்தில் சில குறைகளை சுட்டிக்காட்டினார்.
இதனால் திறப்பு விழா தள்ளிப்போனது. பின் ரயில்வே அமைச்சகத்தின் ஐந்து பேர் குழு, ஜன., 10, 11ல் புதிய பாலத்தை ஆய்வு செய்தனர்.
இதில், புதிய பாலம் மற்றும் துாக்கு பாலம் சீரமைக்கப்பட்டதாக ரயில்வே அமைச்சகத்திற்கு தெரிவித்தனர். நேற்று முதல் திருப்பதி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்களின் காலி பெட்டிகள் முன்பு போல பராமரிப்புக்கு ராமேஸ்வரம் செல்லும் என, தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இதையடுத்து, புதிய பாலம் விரைவில் திறக்கப்படும் என, பயணியர் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
இந்நிலையில், தண்டவாளத்தில் அதிர்வு குறித்து ஆய்வு செய்யும் ரயில் இன்ஜினை பயன்படுத்தி ஜன., 16ல் பாம்பன் புதிய துாக்கு பாலத்தில் நான்கு முறை சோதனை ஓட்டம் நடத்தினர். அன்றிரவே திருப்பதி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிக்கு ராமேஸ்வரம் செல்லாது என, தெற்கு ரயில்வே அறிவித்தது.
இதனால், பாம்பன் பாலம் திறப்பு விழா மீண்டும் இழுபறியில் உள்ளது. வெளிநாட்டு தொழில் நுட்பத்தில் லிப்ட் முறையில் இயங்கும் வகையில் வடிவமைத்த 620 டன் புதிய ரயில் துாக்கு பாலத்திற்கு என்னாச்சு என தெரியாமல் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.