கடன் வாங்கிக்கொண்டே போனால் என்னாவது: அ.தி.மு.க., வாங்கிய கடனை வட்டியுடன் தரும் திறன் உள்ளது: தி.மு.க.,
கடன் வாங்கிக்கொண்டே போனால் என்னாவது: அ.தி.மு.க., வாங்கிய கடனை வட்டியுடன் தரும் திறன் உள்ளது: தி.மு.க.,
ADDED : மார் 21, 2025 01:48 AM

சென்னை: “கடன் வாங்கிக்கொண்டே சென்றால், அது எங்கே போய் முடியும்,” என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தங்கமணி கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - தங்கமணி: 'நாமக்கல் மருத்துவ கல்லுாரிக்கு, அ.தி.மு.க., ஆட்சியில் அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் தான் பணிகள் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது' என, அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது, தவறான தகவல். நாமக்கல் மருத்துவ கல்லுாரியை அ.தி.மு.க., ஆட்சியில் அன்றைய முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். மருத்துவமனை மட்டுமே தி.மு.க., ஆட்சியில் திறக்கப்பட்டது.
அமைச்சர் சுப்பிரமணியன்: நாமக்கல் மருத்துவ கல்லுாரியை, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் மோடி தான் திறந்து வைத்தார். இந்த மருத்துவ கல்லுாரிக்கு குடிநீர் வசதியை கூட, அ.தி.மு.க., அரசு செய்யவில்லை. ஊட்டி மருத்துவ கல்லுாரியை திறந்து வைத்தவர்கள், மருத்துவமனையை திறக்கவில்லை.
அமைச்சர் வேலு: அ.தி.மு.க., ஆட்சியில், 11 மருத்துவ கல்லுாரிகள் அறிவிக்கப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், பல கல்லுாரிகளில் மருத்துவமனை கட்டப்படவில்லை. கட்டட பணிகள் எங்கும் முழுமையாக முடிக்கப்படவில்லை. தி.மு.க., ஆட்சியில் தான் அவை முடிக்கப்பட்டன.
தங்கமணி: 'தமிழக அரசின் கடன் கட்டுக்குள் இருக்கிறது. கடன் வாங்குவதில் தவறில்லை' என, நிதியமைச்சர் கூறுகிறார். தமிழக அரசின் வருவாய், 3.73 லட்சம் கோடி ரூபாயில், கடனுக்கான வட்டியாக, 70,000 கோடி ரூபாய் கட்டுகிறோம், கடன் வாங்கித்தான் மூலதன செலவுகளை செய்கிறோம்.
கடந்த 2021ல் அ.தி.மு.க., ஆட்சி முடியும் போது, 4.80 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. கொரோனா காலத்தில், 60,000 கோடி கடன் வாங்கினோம். 73 ஆண்டுகளில் வாங்கிய கடனை விட, ஐந்து ஆண்டுகளில், 4 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளீர்கள். இன்னும் 2 சதவீதம் கடன் வாங்கலாம் என்று சொல்கிறீர்கள். கடனுக்கான வட்டியாக, 70,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில், இப்படியே கடன் வாங்கிக் கொண்டே சென்றால், அது எங்கே போய் முடியும்?
அமைச்சர் தங்கம் தென்னரசு: தமிழக அரசின் கடன், நிதிக்குழு வரையறுத்த அளவுக்குள் தான் உள்ளது. இன்னும் கடன் வாங்க முடியும். ஆனால், கடன் வாங்க வேண்டுமே என்பதற்காக, கடன் வாங்கும் நிலைக்கு போக மாட்டோம். வாங்கிய கடனை, வட்டியுடன் செலுத்தும் திறன் தமிழகத்திற்கு உள்ளது. அதற்கான பொருளாதாரம் நம்மிடம் உள்ளது.
தங்கமணி: நுாறு நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு சம்பளம் கொடுக்கவில்லை. இதை தமிழக அரசு கொடுத்துவிட்டு, மத்திய அரசு கொடுக்கும்போது எடுத்துக் கொள்ளலாம்.
அமைச்சர் பெரியசாமி: நுாறு நாள் வேலை திட்டத்திற்கான சம்பளத்தை, 100 சதவீதமும் மத்திய அரசு தான் கொடுக்கிறது. தமிழகத்திற்கு, 4,000 கோடி ரூபாய் மத்திய அரசு நிலுவை வைத்துள்ளது. இந்த பணத்தை தமிழகத்தின் 1 கோடி பயனாளர்களுக்கும் நேரடியாக வங்கிக் கணக்கில், மத்திய அரசு செலுத்துகிறது. எனவே, இத்திட்டத்திற்கான சம்பளத்தை, மத்திய அரசு தான் கொடுக்க வேண்டும்.
தங்கமணி: மின் கட்டணத்தை உயர்த்தியும், நஷ்டத்திலேயே இயங்கினால், மின் வாரியத்தை எப்படி காப்பாற்ற முடியும்? விவசாயத்திற்கு அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்டதை போல, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி: அ.தி.மு.க., ஆட்சியில், ஐந்து ஆண்டுகளில் மின் கட்டண மானியமாக, 40,255 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால், தி.மு.க. ஆட்சியில் இதுவரை, 68,407 கோடி ரூபாய் மின் கட்டண மானியம் வழங்கி, மின் வாரியத்தை முதல்வர் ஸ்டாலின் காப்பாற்றியுள்ளார்.
அ.தி.மு.க., ஆட்சியில், ஐந்து ஆண்டுகளில், 25,128 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு வழங்கினர். ஆனால், இப்போது, 64,890 கோடி ரூபாயை முதல்வர் ஸ்டாலின் கொடுத்துள்ளார்.
அ.தி.மு.க., ஆட்சியில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு இரு நாட்களுக்கு முன்பு தான், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க அரசாணை போடப்பட்டது.
அதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படவில்லை. இப்போது, 16 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. 24 மணி நேரமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.