தி.மு.க., தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? சென்னையில் தொடரும் போராட்டங்கள்!
தி.மு.க., தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? சென்னையில் தொடரும் போராட்டங்கள்!
UPDATED : ஜன 11, 2026 07:06 AM
ADDED : ஜன 11, 2026 03:08 AM

சென்னை: தி.மு.க., அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி, ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்தவர்கள், சென்னையில் பல இடங்களில் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பகுதிநேர ஆசிரியர்கள்
பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், பணி நிரந்தரம் கோரி, கடந்த 8ம் தேதி முதல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மூன்றாம் நாளான நேற்று, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி எண் 181ஐ குறிக்கும் வகையில், ஆசிரியர்கள் தங்கள் நெற்றியில், 181 என எழுதியும், கண்ணீர் அஞ்சலி செலுத்தியும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இடைநிலை ஆசிரியர்கள்
'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த டிச., 26 முதல், சென்னையின் பல்வேறு அலுவலகங்கள் முன், தொடர் முற்றுகை போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 16ம் நாளான நேற்று, சென்னை எழும்பூர், காந்தி இர்வின் சாலை மேம்பாலத்தில் குழந்தைகளுடன் அமர்ந்து, தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரயிலில் எழும்பூருக்கு வந்த இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை, அங்கேயே போலீசார் கைது செய்தனர்.
ஊராட்சி செயலர்கள்
தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில், ஊராட்சி செயலர்களையும் இணைக்க வேண்டும்; ஓய்வுபெற்ற அனைத்து ஊராட்சி செயலர்களுக்கும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக, மாதம் 15,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில், சென்னையில் கடந்த 6ம் தேதி முதல் போராட்டம் நடந்து
வருகிறது.
ஐந்தாவது நாளாக நேற்றும், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எழும்பூர் எல்.ஜி., சாலையில் கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்களை, போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்தனர்; மாலையில் விடுவித்தனர்.

