டில்லியில் காங்கிரஸ் காணாமல் போனதற்கு காரணம் என்ன?
டில்லியில் காங்கிரஸ் காணாமல் போனதற்கு காரணம் என்ன?
ADDED : மார் 05, 2024 11:29 PM

டில்லியில், 1998ல் இருந்து, 2013ம் ஆண்டு வரை, காங்கிரசின் ஷீலா தீட்சித், தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்துள்ளார். அதற்கு முன், புதுடில்லியில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., மாறி மாறி வென்று வந்துள்ளன.
ஷீலா தீட்சித்துக்குப் பின், புதுடில்லியில் காங்கிரசுக்கு சரியான தலைமை அமையவில்லை. மேலும், கோஷ்டி பூசல் உள்ளிட்ட பிரச்னைகள் அதற்கடுத்து நடந்த தேர்தல்களில், அடி மேல் அடியாக விழுந்தன.
விஸ்வரூபம்
சட்டசபை, லோக்சபா தேர்தல் மட்டுமல்ல, மாநகராட்சி தேர்தலிலும் தோல்வி தொடர்ந்தது. அதே நேரம், ஆம் ஆத்மி வேகமாக வளரத் துவங்கி, விஸ்வரூபம் எடுத்தது.
கடந்த, 10 ஆண்டு களில் கிட்டத்தட்ட காங்கிரஸ் அங்கு காணாமலேயே போய்விட்டது எனலாம்.
தற்போது முதல் முறை ஓட்டு போடுவோருக்கு, காங்கிரஸ் என்ன செய்தது என்பது தெரியாமலேயே போய்விட்டது.
தற்போதைய டில்லியின் வளர்ச்சிக்கு ஷீலா தீட்சித் காலத்தில்தான் விதை போடப்பட்டது என்பதை, இளம் தலைமுறையினருக்கு தெரிவிக்க காங்கிரசில் யாருமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
கடந்த, 2013 சட்டசபை தேர்தலில், அந்தக் கட்சிக்கு 25 சதவீத ஓட்டு கிடைத்தது.
அது, 2014 லோக்சபா தேர்தலின்போது, 15 சதவீதமாக குறைந்தது. அதற்கு பின், 2015ல் நடந்த சட்டசபை தேர்தலில், 9.7 சதவீதமாக குறைந்தது.
கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், 22.5 சதவீத ஓட்டுகளை பெற்றபோதும், ஒரு இடத்தைக் கூட பிடிக்கவில்லை.
கோஷ்டி மோதல்,
இதைத் தொடர்ந்து, 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில், அதன் ஓட்டு சதவீதம் நான்காக குறைந்தது. இதைவிட மோசம், போட்டியிட்ட, 66 வேட்பாளர்களில், 63 பேர் டிபாசிட் இழந்தனர்.
ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாவிட்டாலும், காங்கிரஸ் மகிழ்ச்சி அடைந்தது.
அதற்கு காரணம், பா.ஜ.,வும் தோல்வி அடைந்தது என்பதே. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி பற்றி கவலைப்பட காங்., தலைவர்கள் மறந்து விட்டனர்.
உட்கட்சி கோஷ்டி மோதல், உள்குத்து உள்ளிட்டவற்றுடன், ஆம் ஆத்மியின் வளர்ச்சியே, காங்கிரசின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்பதை தலைவர்கள் உணர மறந்து விட்டனர்.
பா.ஜ.,விடம் இழந்த சில மாநிலங்களை, காங்கிரஸ் மீட்டெடுத்துள்ளது.
ஆனால், தமிழகம், ஒடிசா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், பீஹார் உள்ளிட்ட பல மாநிலங்களில், பிராந்திய கட்சிகளிடம் இழந்த ஆட்சியை காங்கிரசால் இதுவரை மீட்க முடியவில்லை.
அந்த மாநிலங்களைப் போலவே, புதுடில்லியிலும் வலுவாக உள்ள பிராந்திய கட்சியுடன் கூட்டணி அமைக்கும் நிலைக்கு காங்கிரஸ் தற்போது வந்துள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

