கோவையில் ஜெயிக்கப்போவது யாரு... ஊரு முழுக்க 'பெட்டிங்' ஜோரு!
கோவையில் ஜெயிக்கப்போவது யாரு... ஊரு முழுக்க 'பெட்டிங்' ஜோரு!
ADDED : ஏப் 18, 2024 12:22 AM

ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை சூப்பராக சூது கவ்வுது!
இந்தியாவில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது எந்தக் கட்சி, யார் பிரதமர் என்று உலகமே உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது; தமிழகத்தில் அதிகம் வெல்லப்போவது எந்தக் கூட்டணி என்பதைத் தெரிந்து கொள்ள தேசமே ஆவலோடு இருக்கிறது; ஆனால் கோவையில் ஜெயிக்கப்போவது யார் என்று தமிழகமே தவிப்போடு காத்துக் கொண்டிருக்கிறது.
இன்னும் தெளிவாகச் சொல்வதானால், அண்ணா மலை ஜெயிப்பாரா, மாட்டாரா என்பதே, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் எதிரொலிக்கும் கேள்வியாகவுள்ளது. தி.மு.க., அரசைக் கடுமையாகச் சாடி வரும் அண்ணாமலையை தோற்கடிக்க வேண்டும் என்பது, தி.மு.க., தலைமையின் தீவிரமான விருப்பமாகவுள்ளது. அதனால் கோவையில் வெல்வதற்கு கோடிகளை அள்ளி இறைக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி, மோடியின் பிரசாரம், அண்ணாமலையின் தனிப்பட்ட செல்வாக்கு, அவருக்கான ஆதரவைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது.
இப்போது வரை இத் தொகுதி மக்களின் மனநிலையை, தேர்தல் முடிவை துல்லியமாகக் கணிப்பது கடினமாகவுள்ளது.
இதை வைத்தே, இப்போது 'பெட்டிங்' களை கட்டத் துவங்கியுள்ளது. சாதாரண தொழிலாளர்கள் முதல், தொழில் முனைவோர், வர்த்தகர்கள், ஐ.டி., ஊழியர்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும், ஆயிரம் முதல் லட்சங்கள் வரை, 'பெட்' கட்டத் துவங்கியுள்ளனர். அதிலும் 'அண்ணாமலை வெற்றி பெறுவார்' என்று பெரும் தொகையைக் பந்தயம் கட்டுவோரே அதிகம் உள்ளதாகவும், பல கோடிக்கு 'பெட்டிங்' நடப்பதாகவும் உளவுத்துறையினர் கணக்கெடுத்துள்ளனர்.
பொதுவாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில், அரசியல்ரீதியாக தங்கள் முடிவையே மக்கள் வெளிப்படுத்தி இருப்பார்கள். ஆனால் கடைசி நேரத்தில், ஓட்டுக்கு 500, 1,000 என்று பணப்பட்டுவாடா ஏற்படுத்தும் மாற்றத்தை யாராலும் கணிக்க இயலாது. இந்த மாற்றம், எத்தனை ஆயிரம் பேருக்கு எத்தனை கோடிகளை இழக்க வைக்கப் போகிறது என்பது ஜூன் 4ல் தான் தெரியவரும்.

