பா.ஜ., தேசிய தலைவர் யார்? பிரதானுக்கு மோடி, சவுகானுக்கு ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு
பா.ஜ., தேசிய தலைவர் யார்? பிரதானுக்கு மோடி, சவுகானுக்கு ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு
ADDED : அக் 11, 2024 05:05 AM

சென்னை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை, பா.ஜ., தேசிய தலைவராக்க பிரதமர் மோடியும், அமித் ஷாவும் விரும்புவதாகவும், ஆனால், மத்திய அமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகானை தலைவராக்க, ஆர்.எஸ்.எஸ்., வலியுறுத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ., தேசிய தலைவராக உள்ள நட்டாவின் பதவிக்காலம் முடிந்ததால், அவர் மத்திய அமைச்சராகியுள்ளார். பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முடிந்து, உட்கட்சி தேர்தல் நடக்க இருப்பதால், புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. கிளை கமிட்டி தலைவர் துவங்கி, மாநிலத் தலைவர்கள் தேர்தல் முடிந்து, வரும் டிசம்பர் இறுதியில் தேசிய தலைவர் தேர்தல் நடக்கவுள்ளது.
இதனால், பா.ஜ., புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2014ல் மத்தியில் பா.ஜ., அரசு அமைந்தது முதல், கட்சியின் முக்கிய முடிவுகளை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் மட்டுமே எடுத்து வருகின்றனர். தேசிய தலைவர் தேர்வு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மாநில முதல்வர்கள் என முக்கியமான தேர்வுகளை, பிரதமர் மோடியும், அமித் ஷாவும் மட்டுமே எடுத்தனர்.
கட்சிக்கு தொடர் வெற்றி கிடைத்து வந்ததால், அவர்களின் முடிவில் மற்றவர்கள் யாரும் தலையிட முடியாத நிலை இருந்தது. லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், முக்கிய முடிவுகளை எடுப்பதில் ஆர்.எஸ்.எஸ்.,சையும் ஆலோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், பா.ஜ., தேசிய தலைவர் தேர்வு தாமதமாகி வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பூபேந்தர் யாதவ், மஹாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ஆகிய மூவரில் ஒருவரை தலைவராக்க, பிரதமர் மோடியும், அமித் ஷாவும் விரும்புவதாக கூறப்படுகிறது.
தோற்கும் என கணிக்கப்பட்ட ஹரியானாவில், பா.ஜ., தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றுள்ளது. இது, அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக இருந்த தர்மேந்திர பிரதானுக்கு சாதகமாகியுள்ளது.
பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர், ஹரியானா வெற்றிக்கு தர்மேந்திர பிரதானை பாராட்டி வருவதால், அவருக்கு தேசிய தலைவர் பதவி என்ற ஜாக்பாட் அடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேசம், ராஜஸ்தானில் பா.ஜ.,வுக்கு பெரும் சரிவு ஏற்பட்டது. 2014, 2019 போல ஹிந்தி பேசும் மாநிலங்களில், பா.ஜ., வெற்றியை தொடர வேண்டுமானாலும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான சிவ்ராஜ்சிங் சவுகானை தேசிய தலைவராக்க வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
சிவ்ராஜ்சிங் சவுகான் தலைவரானால், அவர் சுதந்திரமாகச் செயல்படுவார் என்பதால், ஆட்சிக்கும், கட்சிக்கும் இடையே இடைவெளி அதிகமாகி விடும் என கருதும் பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் பலரும், தர்மேந்திர பிரதான் அல்லது பூபேந்தர் யாதவை தலைவராக்க வலியுறுத்தி வருகின்றனர்.
'கட்சிக்குள் கூட்டு முடிவுகள் தான் எடுக்கப்பட வேண்டும். மாறாக தனி நபர்கள் முடிவெடுப்பது, எதிர்காலத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்; 2029 லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, பா.ஜ., புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும்' என்று ஆர்.எஸ்.எஸ்., வலியுறுத்தி வருவதாக பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.