ADDED : மார் 17, 2024 02:37 AM

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நெற்றியில் ரத்தம் சொட்டும் நிலையில் உள்ள புகைப்படத்தை, அவரது கட்சி சமூக வலைதளத்தில் பதிவிட்டு, 'முதல்வருக்கு அடிபட்டு விட்டது' என, தெரிவித்திருந்தது.
'ட்ரெட் மில்லில் உடற்பயிற்சி செய்த போது, கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டது' என சொல்லப்படுகிறது. ஆனால், மம்தாவோ, 'என்னை யாரோ பின்னாலிருந்து தள்ளி விட்டனர்' என, மருத்துவர்களிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.
ஆனால், மம்தாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை, 'மம்தா மயக்கமாகி விழுந்து விட்டார்' என, கூறியிருக்கிறது.
இப்படி மம்தாவின் வாக்குமூலமும், மருத்துவமனையின் அறிக்கையும் வேறுபடுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. முதல்வருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு பங்களாவில் வசிக்காமல், தன் வீட்டிலேயே குடும்பத்தினருடன் இருக்கிறார் மம்தா; இதனால், பாதுகாப்பு சற்று குறைவு.
மம்தாவின் வீட்டில் உள்ளோர் மீது போலீசார் சந்தேகப்படுகின்றனர். 'இப்படித்தான் ஜெயலலிதா கீழே விழுந்து, மருத்துவமனையில் பல நாட்கள் இருந்து காலமானார்' என்பதை பாதுகாப்பு போலீசார் சுட்டிக் காட்டுகின்றனர்.
மம்தாவிற்கு மிகவும் நெருக்கமாக கூடவே இருப்பது, அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி. இவர் மீது மம்தாவின் சகோதரர் சந்தேகப்படுகின்றார்.
'கடந்த தேர்தலின் போது காலில் கட்டுடன் பிரசாரம் செய்து, அனுதாப அலையை உண்டாக்கினார் மம்தா; ஆனால், இந்த முறை அது நடக்காது. காரணம், சந்தேஷ்காலியில் திரிணமுல் பிரமுகர் பாலியல் பலாத்காரம் விவகாரம் இப்போது பற்றி எரிகிறது' என்கின்றனர். அரசு பங்களாவிற்கு மம்தா மாற வேண்டும் என்பதில் பாதுகாப்பு படை குறியாக உள்ளது. ஆனால், மம்தா சம்மதிப்பாரா என்பது சந்தேகமே!

