'யார் சொன்னாங்க?' : நானும், அன்புமணியும் சேரவில்லையே?: மீண்டும் சொல்கிறார் பா.ம.க. ராமதாஸ்
'யார் சொன்னாங்க?' : நானும், அன்புமணியும் சேரவில்லையே?: மீண்டும் சொல்கிறார் பா.ம.க. ராமதாஸ்
UPDATED : ஆக 17, 2025 03:15 AM
ADDED : ஆக 17, 2025 02:07 AM

சென்னை:“நானும், அன்புமணியும் சமாதானம் ஆகிவிட்டதாக, யார் சொன்னது? கட்சிக்கு எதிராக செல்பவருடன், எப்போதும் சமரசம் கிடையாது. பா.ம.க. பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி, இன்று நடக்கும்,” என, கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சுதந்திர தினம் அன்று இரவு, மனைவி, மகள்கள், பேரக் குழந்தைகளுடன், தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தார் அன்புமணி. தாய் சரஸ்வதியின் பிறந்த நாளை, 'கேக்' வெட்டி கொண்டாடினார். அப்போது தந்தை ராமதாசும் உடனிருந்தார். இதனால், அன்புமணியுடன் ராமதாஸ் சமாதானமாகி விட்டதாகவும், புதுச்சேரியில் இன்று அவர் ஏற்பாடு செய்தபா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடக்காது என்றும் செய்தி வெளியானது.
இதை மறுத்து ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:
பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம், ஞாயிறு காலை 10 மணிக்கு, புதுச்சேரியில் திட்டமிட்டபடி நடக்கும்; அதில் எந்த மாற்றமும் இல்லை. பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக, விஷமிகள் பரப்பும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை அடுத்து, தைலாபுரத்தில், ராமதாஸ் அளித்த பேட்டி:
பொதுக்குழுவில், முக்கியமான பல தீர்மானங்களை நிறைவேற்ற இருக்கிறோம். குறைந்தது, 4,000 பேர் பங்கேற்பார்கள்.
என் மனைவி சரஸ்வதிக்கு நேற்று, 77வது பிறந்த நாள். அம்மாவுக்கு வாழ்த்து சொல்ல, குடும்பத்துடன் அன்புமணி வந்தார். எனக்கு வணக்கம் சொன்னார்; பதிலுக்கு நானும் வணக்கம் சொன்னேன்; வேறு எந்த பேச்சும் இல்லை. பதில் வணக்கம் சொன்னால் சமாதானம் என்று அர்த்தமா? யார் சொன்னது? அவருடன் எவ்வித சமாதானமும் ஏற்படவில்லை. ஏற்பட்டது போல, வழக்கம் போல் பொய் பரப்புகின் றனர்.
மீண்டும் சொல்கிறேன், பொதுக்குழு கூட்டம் நடக்கும். கட்சிக்கு எதிராக செல்வோருடன் எப்போதும் சமரசம் கிடை யாது.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
இதனால் அக்கட்சியின் தொண்டர்களிடம் குழப்பம் அதிகரித்துள்ளது.
ராமதாஸ் தனி செயலர் பாதுகாப்பு கோரி மனு டி.ஜி.பி.,யிடம் அளித்துள்ள மனு:
ராமதாசின் தனி செயலராக இருக்கிறேன். சென்னை பாலவாக்கத்தில் குடும்பத்துடன் வசிக்கிறேன். கடந்த 2004 - 24 வரை, பா.ம.க., தலைவர்அன்புமணியின் தனி செயலராக இருந்தேன். கருத்து வேறுபாடுகளால் வெளி யேறினேன். நேற்று முன்தினம் பாலவாக்கம் கடற்கரையில் மனைவி, மகனுடன் டீகுடித்து கொண்டிருந்தேன்.
அங்கு வந்த மர்ம நபர்கள், 'ராமதாசுக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது. மனைவி, மகன் மீது அக்கறை இருந்தால் பாலவாக்கத்தில் இருந்து வெளியேறி விடு' என, மிரட்டினர். இதன் பின்னணியில், அன்புமணி மற்றும் அவரது மனைவி சவுமியா இருப்பதாக சந்தேகிக்கிறேன். என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

