மஹா., முதல்வர், துணை முதல்வர்கள் யார்?: பா.ஜ., கூட்டணியில் தீவிர ஆலோசனை
மஹா., முதல்வர், துணை முதல்வர்கள் யார்?: பா.ஜ., கூட்டணியில் தீவிர ஆலோசனை
ADDED : நவ 24, 2024 11:49 PM

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் இமாலய வெற்றி பெற்றுள்ள மஹாயுதி கூட்டணியில், முதல்வர், இரண்டு துணை முதல்வர்கள் இருப்பர் என்பது உறுதியாகி உள்ளது. ஆனால், யார் யாருக்கு எந்தப் பதவி கிடைக்கும் என்பது தொடர்பாக, தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம், நாளையுடன் முடிவடைவதால், அதற்குள் புதிய அரசு பதவியேற்கும் என, கூறப்படுகிறது.
மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. மொத்தமுள்ள, 288 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு, 145 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆளும் சிவசேனா, பா.ஜ., மற்றும் தேசியவாத காங்., அடங்கிய மஹாயுதி கூட்டணி, 233 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.
இதில், பா.ஜ., 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. சிவசேனா 57 இடங்களிலும், தேசியவாத காங்., 41 இடங்களிலும் வென்றன.
கடந்த 2022ல், சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறினர்.
சிக்கல் இல்லை
இதனால், உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் இருந்து விலக நேரிட்டது. இதையடுத்து ஏக்நாத் ஷிண்டேவுக்கு, பா.ஜ., ஆதரவு அளித்தது. அவர் முதல்வரானார். கடந்த 2014 - 2019ல் முதல்வராக இருந்த பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வராக பதவியேற்றார்.
கடந்தாண்டு, தேசியவாத காங்.,கில் பிளவு ஏற்பட்டு, அஜித் பவார் விலகி, கூட்டணி அரசில் இணைந்தார். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
தற்போது நடந்த தேர்தலை, இந்தக் கூட்டணி பா.ஜ., தலைமையில் சந்தித்தது. மேலும், அதிக இடங்களில் பா.ஜ., வென்றுள்ளதால், அக்கட்சிக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி, தேவேந்திர பட்னவிஸ், மீண்டும் முதல்வராவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதுள்ள அரசில், ஒரு முதல்வர், இரண்டு துணை முதல்வர்கள் என்பதை, வரும் ஆட்சியிலும் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்க பா.ஜ., தலைமை தயாராக உள்ளது.
இதில், அஜித் பவார் அந்தப் பதவியை ஏற்பதில் எந்த சிக்கலும் இருக்காது. ஆனால், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர் பதவியை ஏற்பாரா என்பதே கேள்வியாக உள்ளது.
கடந்த 2022ல், ஏற்கனவே முதல்வராக இருந்த தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர் பதவியை ஏற்றதுபோல், தற்போது, ஏக்நாத் ஷிண்டேயும், துணை முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என, பா.ஜ., தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
கூட்டணி தர்மம்
கூட்டணி தர்மத்தை மதித்தும், மக்களிடையே சிறந்த முதல்வர் என்ற பிம்பம் உள்ளதாலும், ஷிண்டேயே தொடர்ந்து முதல்வராக இருக்க சிவசேனா வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, கூட்டணியில் உள்ள கட்சிகளின், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில், சிவசேனாவில் சட்டசபை கட்சித் தலைவராக ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்.,கில் அஜித் பவார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தவிர, புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாகவும், பதவிகள் தொடர்பாகவும் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஷிண்டே மற்றும் அஜித் பவாருக்கு வழங்கி, அவரவர் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தீர்மானம் நிறைவேற்றிஉள்ளனர்.
இதற்கிடையே, முதல்வர், துணை முதல்வர்கள், அமைச்சர்கள், இலாகாக்கள் ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக விவாதிப்பதற்கான கூட்டணியின் கூட்டம், மும்பையில், இன்று நடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம், நாளையுடன் முடிவுக்கு வருகிறது. அதனால், விரைவில் முடிவுகள் எடுக்கப்பட்டு, நாளை பதவியேற்பு விழா நடைபெறும் என, கூறப்படுகிறது.