மதுரை புதிய மேயர் தேர்வில் யார் கை ஓங்கப்போகுது; அமைச்சர்கள் மூர்த்தி - தியாகராஜனுக்கு இடையே போட்டி
மதுரை புதிய மேயர் தேர்வில் யார் கை ஓங்கப்போகுது; அமைச்சர்கள் மூர்த்தி - தியாகராஜனுக்கு இடையே போட்டி
ADDED : ஆக 21, 2025 04:15 AM

மதுரை: மதுரை மாநகராட்சிக்கு புதிய மேயரை தேர்வு செய்வது தொடர்பாக அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜனுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று இரவு வரை இருதரப்பினரிடமும் சென்னையில் உள்ள அமைச்சர் நேரு வீட்டில் பேச்சுவார்த்தை நடந்தது.
தற்போது மேயராக இந்திராணி உள்ளார். மாநகராட்சி சொத்துவரி முறைகேடு தொடர்பாக இவரது கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து இந்திராணியையும் மேயர் பதவியில் இருந்து துாக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.
இதனால் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், நகர் செயலாளர் தளபதி ஆகியோருக்கு இடையே தங்கள் ஆதரவாளர்களை மேயராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்த விஷயத்தில் தியாகராஜனுடன் நகர் செயலாளர் தளபதியும், அமைச்சர் மூர்த்தியுடன் தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறனும் இரண்டு அணிகளாக பிரிந்து தங்கள் ஆதரவாளர் ஒருவரை புதிய மேயராக்குவதில் கடும் போட்டி நிலவுகிறது.
இதன் எதிரொலியாக நேற்று மதியம் இரண்டு அமைச்சர்களும் அவசர அவசரமாக மதுரையில் இருந்து சென்னைக்கு கிளம்பிச் சென்றனர்.
அனைவரும் சேர்ந்து வாருங்கள் இதுகுறித்து தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
இரண்டு நாட்களுக்கு முன் முதல்வரை சந்தித்த அமைச்சர் தியாகராஜன் மதுரை மேயர் தேர்வு குறித்து பேசியுள்ளார்.
அதற்கு இந்திராணியை தேர்வு செய்ததும் நீங்கள் தான். தற்போது சர்ச்சையாக உள்ளது.
எனவே மதுரை மேயர் தேர்வு செய்ய அனைவரும் சேர்ந்து வாருங்கள் என முதல்வர் தெரிவித்துவிட்டார்.
இதற்கிடையே அமைச்சர் மூர்த்தி தரப்பு மண்டலம் 1ன் முன்னாள் தலைவர் வாசுகியையும், தியாகராஜன் தரப்பு 61 வது வார்டு கவுன்சிலர் செல்வியையும் பரிந்துரை செய்கின்றனர்.
இதில் யார் கை ஓங்கும் என்பது தெரியவில்லை. இதனிடையே முதல்வரின் திருமண நாளை முன்னிட்டு சென்னையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் பங்கேற்க சென்ற அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் தரப்பை அமைச்சர் நேரு, தனது வீட்டிற்கு அழைத்து இரவு பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது, 'மாநகராட்சியின் அதிக வார்டுகள் தெற்கு, வடக்கு மாவட்டங்களில் தான் உள்ளன.
நாங்கள் சிபாரிசு செய்தவருக்கு தான் பதவி வேண்டும்' என மூர்த்தி, மணிமாறன் தரப்பும், 'நகர் மாவட்டம் எங்களுக்கு உட்பட்டது.
ஏற்கனவே மத்திய தொகுதியில் இருந்து தான் மேயர் தேர்வு செய்யப்பட்டார். அதே சமூகத்தை சேர்ந்தவருக்கு பதவி கொடுத்தால் பிரச்னை இருக்காது' என தியாகராஜன், தளபதி தரப்பும் முறையிட்டது.
இரு தரப்பிலும் அமைச்சர் நேரு நீண்ட நேரம் பேசியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தான் மேயர் யார் என்பதை உறுதி செய்வார்.
மாநகராட்சி கமிஷனர் சித்ரா தரப்பிலும் மேயர் தேர்வு குறித்து கருத்து கேட்கப்படும்.
விரைவில் புதிய மேயர் அறிவிப்பு வந்துவிடும் என்றனர்.