லோக்சபா தேர்தலில் யாருக்கு ஆதரவு? 'பல்ஸ்' பார்க்கும் விஜய் கட்சி
லோக்சபா தேர்தலில் யாருக்கு ஆதரவு? 'பல்ஸ்' பார்க்கும் விஜய் கட்சி
ADDED : ஏப் 03, 2024 05:57 AM

'கட்சியில் இருப்பவர்களை, சின்னப் பசங்க என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், எங்கள் ஓட்டு தான், அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும்' என்று, சொல்கின்றனர், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சிலர்.
லோக்சபா தேர்தல் பிரசாரம், தமிழகத்தில் களை கட்டியுள்ளது. ஒரு பக்கம் குற்றச்சாட்டு, மறு பக்கம் அதற்கு பதிலடி என, தங்கள் கட்சிக்கு ஆதரவு கோரும் படலத்திலும் விறுவிறுப்பு. திரையில் பார்த்த நடிகர்களை, தேர்தல் பிரசாரத்தில் நேரில் பார்க்கும்போது, கரைபுரள்கிறது உற்சாகம்.
இப்போது, கட்சியினரின் பார்வை விஜய் பக்கம் திரும்பியுள்ளது. இவரின் ஆதரவை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்று, காய் நகர்த்துகின்றனர். விஜய், கட்சிப் பெயர் அறிவித்து, உறுப்பினர் சேர்க்கையை துவங்கிய நிலையில், தற்போது வரை, 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர் என பெருமிதம் தெரிவிக்கின்றனர், கட்சி நிர்வாகிகள் சிலர்.
இளைஞர்களின் ஓட்டு மிக முக்கியம் என்ற நிலையில், அதுவும் ஏராளமான இளைஞர் பட்டாளத்தை வைத்துள்ள விஜய் கட்சியினர், யாருக்கு ஆதரவு தெரிவிக்கப் போகின்றனர் என்பது மிகப்பெரிய கேள்வி.
இதுகுறித்து, கட்சியின் கோவை நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்னதாகவே, நடிகர் விஜயின் ஆலோசனைப்படி, எங்கள் மன்றத்தினர், மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எங்களிடம், கட்சியினர் பலர் ஆதரவு கேட்க, சந்திக்க நேரம் தர வேண்டும் என்று கேட்கின்றனர். தலைமையிடம் கேட்டு சொல்கிறோம் என்று நாங்கள் கூறி வருகிறோம். தலைமையில் இருந்து எந்த உத்தரவு வருகிறதோ, அதன்படி செயல்படுவோம்.
தேர்தலுக்கு முந்தைய நாள் கூட, உத்தரவு வரலாம். யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள்; ஆனால், ஜனநாயக கடமை முக்கியம் என்றும் கூட தெரிவிக்கலாம். எங்களின் இலக்கு 2026 தான். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இந்த லோக்சபா தேர்தலின் முடிவுக்கு பின் தான், கட்சிகளின், 'பல்ஸ்' பார்க்கப் போகிறார்; அதன் பின், அரசியல் நடவடிக்கையில் முழு வீச்சில் களமிறங்கப் போகிறார் என்றும் பரவலாக பேச்சு எழுந்துள்ளது.

