ADDED : மே 21, 2024 03:30 AM

உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
இலங்கையில் 20 பயங்கரவாத இயக்கங்கள் இருந்தன. பெரும்பாலானவை ஒரு மதத்தை சார்ந்தவை என்பதால், உலக அளவில் இயங்கும் பிற பயங்கரவாத இயக்கங்களோடு தொடர்பில் இருந்தன. அதனால், பல நாடுகளின் பயங்கரவாத இயக்க தலைவர்களிடம் இருந்து வரும் உத்தரவுகளை நிறைவேற்றி வந்தன. கொழும்பு சர்ச்சில் 2019 ஏப்ரல் 21ல் நடந்த ஈஸ்டர் நிகழ்ச்சியில் குண்டுகளை வெடிக்க வைத்தனர். இதில் 218 பேர் இறந்தனர். இதையடுத்து, 20 அமைப்புகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. அவற்றின் உறுப்பினர்கள் வேறு நாடுகளுக்கு சென்று நாசவேலை செய்து வருகின்றனர்.
அப்படி இந்தியாவுக்குள் ஊடுருவிய பலரை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. ஆனாலும், சமீப காலமாக பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ., அமைப்பு, இலங்கையில் தலைமறைவாக செயல்படும் பயங்கரவாத குழுக்களை ஏவி விடுவது அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக, லோக்சபா தேர்தல் முடிவதற்குள் பெரிய அசம்பாவிதத்தை நிகழ்த்தி காட்ட வேண்டும் என்ற திட்டத்தோடு செயல்படும் ஐ.எஸ்., அமைப்பு, இன்னும் சில மாதங்களில் இலங்கையில் நடக்க உள்ள தேர்தலை ஒட்டி அங்கும் சம்பவங்களை நிகழ்த்தும் முனைப்போடு உள்ளது.
அந்த அமைப்பின் ஒரு தரப்பினர் தான், ஆமதாபாதில் சிக்கியவர்கள். அவர்களிடம் பிடிபட்ட கைத்துப்பாக்கிகள் உள்ளிட்டவை பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை. துப்பாக்கிகள் சீனாவின் நோரின்கோ 54 ரகத்தை சேர்ந்தவை. வெடி மருந்தும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதுவும் பாகிஸ்தானை சேர்ந்தது.
இவ்வளவு விஷயங்கள் இலங்கையை மையமாக வைத்து நடந்து கொண்டிருக்க, கடந்த ஆண்டு ஜூலையில் அங்கு ஐந்து இயக்கங்கள் மீதான தடையை இலங்கை அரசு விலக்கிக் கொண்டது. அதன்பின், இலங்கையில் பயங்கரவாத குழுவினர் துணிச்சலாக செயல்பட துவங்கி உள்ளனர்.
இவ்வாறு உளவு வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

