ADDED : ஜூலை 02, 2025 02:23 AM

வேலுார்: 'டிரெண்ட் மாறியதால், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசாரம் மூலம் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க உள்ளோம்' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தி.மு.க., சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற 45 நாள் பிரசாரத்தை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
வேலுாரில் பிரசாரத்தை துவக்கி வைத்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய சித்தாந்தத்தை முதல்வர் அறிவித்து இருக்கிறார். இந்த தலைப்பு, பல்வேறு கோணங்களை உள்ளடக்கி இருக்கிறது.
பிரிந்திருக்கும் அல்லது ஒரே கருத்துடையவர்கள் யார், யார் என்பதையெல்லாம் கண்டறிந்து அவர்களை சந்தித்து, கொள்கைகளை விளக்கி, நம் அணியில் சேர்க்க வேண்டும். இதுதான், இந்த தத்துவத்தின் நோக்கம்.
யாரோ நான்கு பேரை சந்தித்தேன்; அவர்களிடம் கேட்டேன்; ஒரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைய மூன்று பேர் வர்றேன் என்று சொன்னான்; வந்தான். ஒருத்தன் மட்டும் வரவில்லை என சொல்லி ஒதுங்கிவிட முடியாது.
தி.மு.க., என்பது வெறும் அரசியல் கட்சி மட்டும் அல்ல; சமுதாய போராளி கட்சி. தமிழகத்தின் இனம், மானம், மொழி, மரியாதை இவற்றை காக்கும் கட்சி. தமிழகம், யாருக்கும் இரண்டாம்தர மாநிலமாக போய்விடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டும் கட்சி.
இதை, அனைவருக்கும் எடுத்துச் சொல்லும் பணியை ஒவ்வொரு தி.மு.க., தொண்டனும் ஏற்க வேண்டும்.
தேர்தலை நோக்கிய பிரசாரத்தின் முகமே இன்று மாறிப்போய் இருக்கிறது. அப்போதெல்லாம் தேர்தல் என்றாலே பொதுக்கூட்டம் நிச்சயம் நடக்கும்.
ஆண்களும், பெண்களும் அடுக்கடுக்காக உட்கார்ந்து, பொதுக்கூட்டத்தை கேட்டு ரசிப்பர். அதில் பேசப்படும் விஷயத்தை உள்வாங்கி, அசைபோடுவர். பின்பே, ஓட்டளிப்பர்.
ஆனால் இன்றைக்கு, அந்த டிரெண்ட் இல்லை. எதை வேண்டுமானாலும், டி.வி.,யில் பார்த்துவிடலாம் என்ற நிலை உள்ளது. மைக் பிடித்து பேசும் கலாசாரமெல்லாம் போயே போய்விட்டது.
தி.மு.க.,வின் ஒவ்வொரு தொண்டணும் வீடு வீடாகச் செல்ல வேண்டும். இன்றைய அரசியல் சூழல் குறித்து பேச வேண்டும். அப்போது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் செயல்பாடுகள் குறித்தும் சொல்ல வேண்டும்.
சந்திக்கும் ஒவ்வொரு நபரிடமும் 10 நிமிடங்கள் வரை பேச வேண்டும். அப்படி செய்தால், தி.மு.க., மீதும் அரசு மீதும் அவர்களுக்கு நாட்டம் ஏற்படும்.
தமிழக அரசு நிதி பங்கீடு விஷயத்தில் துவங்கி, திட்டங்களை தமிழகத்துக்கு அளிப்பது வரை தொடர்ந்து வஞ்சிக்கிறது.
அவை குறித்தும், மக்களிடம் தி.மு.க.,வினர் ஒவ்வொருவரும் எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்கு, ஓரணியில் அனைவரும் ஒருமித்து திரள வேண்டும்.
ஒவ்வொரு தொண்டனும் வீடு வீடாக சென்று பேசும்போது, அவர்கள் சொல்லும் குறைகளையும் கேட்பர்.
அதெல்லாம் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். எதிர்க்கட்சி என்றால், ஆளுங்கட்சியை விமர்சிக்கத்தான் செய்யும். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.