ஆளும் கட்சிக்கு நெருக்கமான ஆதவ் அர்ஜுனா திருமா கட்சியில் அறிமுகம் ஆவது ஏன்?
ஆளும் கட்சிக்கு நெருக்கமான ஆதவ் அர்ஜுனா திருமா கட்சியில் அறிமுகம் ஆவது ஏன்?
UPDATED : பிப் 18, 2024 02:53 AM
ADDED : பிப் 17, 2024 11:05 PM

லோக்சபா தேர்தலில், விடுதலை சிறுத்தை கட்சி சார்பில், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா போட்டியிட வாய்ப்புள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், கட்சியில் சேர்ந்த ஒரே மாதத்திற்குள் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தல், 'சீட்' பங்கீடு தொடர்பாக, 12ம் தேதி தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பு குழுவினருடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பேசினர். அப்போது, எட்டு தொகுதிகளுக்கான உத்தேச பட்டியலை, திருமாவளவன் கொடுத்துள்ளார். அதில், நான்கு தொகுதிகளை ஒதுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்.
தனிச் சின்னம்
தி.மு.க., நிர்வாகிகள், 'நீங்கள் நான்கு இடங்களை கேட்டால், ம.தி.மு.க., - கம்யூ., கட்சிகளும் அவ்வாறே கேட்க வாய்ப்பு உள்ளது. சிதம்பரம், விழுப்புரம் ஆகிய, 'சிட்டிங்' தொகுதிகளை பெற்றுக் கொள்ளுங்கள். கூடுதல் இடம் குறித்த உங்கள் விருப்பத்தை தலைமையிடம் தெரிவிக்கிறோம்' என்று கூறியுள்ளனர்.
ஆனால், இந்த முறை குறைந்தது மூன்று தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில், திருமாவளவன் உறுதியாக உள்ளார். அதே நேரத்தில், தனிச் சின்னத்தில் போட்டியிடுவதிலும், அவர் உறுதியாக உள்ளார்.
3வது 'சீட்' யாருக்கு?
ஒருவேளை, மூன்று தொகுதிகள் கிடைத்தால், திருமாவளவன், ரவிக்குமார் தவிர்த்து, மூன்றாவது 'சீட்' யாருக்கு என்ற விவாதம், விடுதலை சிறுத்தை கட்சியில் எழுந்துள்ளது. அந்த இடத்தை, கட்சியின் சமூக ஊடக பிரசார பணிகளை கவனித்து வரும், ஐ.டி., பிரிவு ஆதவ் அர்ஜுனாவுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
திருச்சியில், ஜன., 26ல் நடந்த கட்சி மாநாட்டை சிறப்பாக ஒருங்கிணைத்து, வி.சி., நிர்வாகிகளிடம் ஆதவ் அர்ஜுனா அறிமுகமானார். அப்போது தான் கட்சியிலும் இணைந்தார்.
இந்த மாநாட்டை, 'வாய்ஸ் ஆப் காமென்' என்ற தன் நிறுவனம் வாயிலாக, ஆதவ் நடத்தினார். அதற்கு முன்னதாக, கட்சியின் விருது வழங்கும் விழா, பூத் கமிட்டி கூட்டம் ஆகியவற்றையும் ஒருங்கிணைத்துள்ளார். கட்சியில் சேர்ந்த ஒரே மாதத்துக்குள், எம்.பி., சீட்டா என்ற சர்ச்சை எழுந்தாலும், ஆதவ் அர்ஜுனா போன்ற பொருளாதார பின்னணி உடையவர் அவசியம் என, திருமாவளவன் நினைக்கிறார்.
யார் இவர்?
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா; இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுச்செயலராக உள்ளார். தி.மு.க., குடும்ப உறுப்பினர்களுக்கு மிக நெருக்கமானவரான ஆதவ், அக்கட்சியின் தேர்தல் பணிகளையும் சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார்.
தி.மு.க.,வின் லோக்சபா தேர்தல் பணிகளில், ஆதவ் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் கூறப்பட்டது. அதனால், ஒரே நேரத்தில் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை சோதனைகளை எதிர்கொண்டார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜுனாவின், 'அரைஸ்' அலுவலகம் உட்பட, பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. முடிவில், லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான 451.07 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இந்நிலையில், தி.மு.க.,வுக்கு பதில், அவர் வி.சி., கட்சியில் சேர விரும்பினார். உடனே திருமாவளவனும் ஏற்றுக் கொண்டார். இந்த சந்திப்புக்கு பின், கட்சி வளர்ச்சிக்கு அவர் கொடுத்த செயல் திட்டமும் மிக முக்கியமானது என்று கூறப்படுகிறது.
15ல் செல்வாக்கு
வடமாவட்டங்களில் பட்டியலின மக்களை ஒருங்கிணைப்பதில், வி.சி., கட்சியில் தேக்கம் உள்ளது. 15 லோக்சபா தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக, பட்டியலின மக்கள் உள்ளனர்.இந்த தொகுதிகளில் சரியாக களப்பணி செய்தால், பிரதான கட்சிகளின் பார்வை வி.சி., பக்கம் திரும்பும். 2026 சட்டசபை தேர்தலை மையமாக வைத்து, 25 தொகுதிகளில் களப்பணி பார்த்து, பட்டியலின மக்களை ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி செய்தால், 15 சட்டசபை தொகுதிகளில் உறுதியாக வெல்வோம் என சில புள்ளி விபரங்களை பட்டியலிட்டு, ஆதவ் அர்ஜுனா விளக்கியிருக்கிறார். அதை திருமாவளவனும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில் பொதுத் தொகுதிகளான பெரம்பலுார் அல்லது கள்ளக்குறிச்சியில், ஆதவ் அர்ஜுனாவை களமிறக்கும் முடிவில், திருமாவளவன் உள்ளார். இதற்கு உபகாரமாக, வி.சி., கட்சி வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை, ஆதவ் ஏற்றுக்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
'தேர்தல் நெருக்கத்தில் எல்லாமே முடிவாகும்'விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலரான ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:தேர்தல் அரசியலில், 12 ஆண்டுகளாக இருக்கிறேன். அடித்தட்டு அளவில் பாகுபாடுகளை எதிர்கொண்டுள்ள மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதால், வி.சி., கட்சியில் இணைந்தேன். பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்கான கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்பது, என்னுடைய விருப்பம்.
பொதுத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து, கட்சியின் தலைவரும், பொதுச்செயலரும் தான் முடிவு செய்ய வேண்டும். தேர்தல் நெருக்கத்தில், அவர்கள் முடிவெடுப்பர். வி.சி.,யில், தி.மு.க., அனுதாபியாக, என்னை யாரும் பார்க்க வேண்டாம். எங்கு சமூக நீதி, சமத்துவம் இல்லையோ, அதை ஒருங்கிணைப்பதை பிரதான பணியாக பார்க்கிறேன்.
கடந்த 2021 சட்டசபை தேர்தல் முடிந்தவுடன், பட்டியல் இன மக்கள் மத்தியில் உள்ள பாகுபாடுகளை சரி செய்ய நினைத்தேன். கல்வி உட்பட அனைத்து இடங்களிலும் அம்மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். அவர்கள் முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும் என்றால், அதற்கான சரியான தேர்வாக வி.சி., உள்ளது என்பதை அறிந்து, அவ்வியக்கத்தில் இணைந்தேன். திருமாவளவனுடன் 2019 மற்றும் 2021 தேர்தல்களில் இணைந்து பணியாற்றி உள்ளேன்.என்னுடைய பணியும், நடத்தையும் பிடித்திருந்ததால், கட்சியை மறுஉருவாக்கம் செய்யும் பணிக்காக அழைத்தார்; ஏற்றுக் கொண்டு செயல்படுகிறேன். கட்சியில் எனக்கு துணை பொதுச்செயலர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அப்பதவிக்குரிய மரியாதையுடன் நடந்து கொள்வதோடு, பதவியை வைத்து கட்சியை பல படி முன்னேற்றமடைய வைக்க நிறைய பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -