தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்; தங்கதமிழ்செல்வன் புறக்கணிப்பு ஏன்
தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்; தங்கதமிழ்செல்வன் புறக்கணிப்பு ஏன்
ADDED : ஆக 14, 2025 04:37 AM

சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., மாவட்டச்செயலர்கள் கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. அதில், தேனி வடக்கு மாவட்டச் செயலரும், எம்.பி.,யுமான தங்கதமிழ்செல்வன் பங்கேற்கவில்லை.
சமீபத்தில், தன்னை அவமதித்த மாவட்ட நிர்வாகிகள் மீது, தி.மு.க., தலைமை நடவடிக்கை எடுக்கும் என, தங்கதமிழ்செல்வன் எதிர்பார்த்தார்; ஆனால், தலைமை கண்டுகொள்ளவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த தங்கதமிழ்செல்வன், மாவட்டச் செயலர்கள் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்துள்ளார்.
இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது.
அந்நிகழ்ச்சியின் மேடையில் தங்க தமிழ்செல்வனும், ஆண்டிபட்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., மகாராஜனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.
அநாகரிகமான வார்த்தைகளை பேசி, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் கட்சித் தலைமைக்கு சென்றதும், மகாராஜனை அழைத்து தலைமை கண்டிக்கும் என, தங்கதமிழ்செல்வன் எதிர்பார்த்தார். ஆனால், கட்சி தலைமை கண்டுகொள்ளவில்லை. அதனால், தங்கதமிழ்செல்வன் அதிருப்தியில் இருந்தார்.
டில்லியில் இருந்து சென்னை வந்திருந்த அவர், நேற்று மதியம் வரை தங்கியிருந்ததார்; மதியத்திற்கு மேல் தேனி சென்று விட்டார். சென்னையில் தங்கியிருந்தும், மாவட்டச்செயலர்கள் கூட்டத்திற்கு வராமல் அவர் தவிர்த்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -