'லஞ்ச அதிகாரி' மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? 'காரணம்' சொல்கிறார் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்
'லஞ்ச அதிகாரி' மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? 'காரணம்' சொல்கிறார் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்
UPDATED : செப் 26, 2024 06:12 AM
ADDED : செப் 25, 2024 08:53 PM

கோவை நகரப் பகுதியில் வளர்ச்சி பணிகளை வேகப்படுத்தி வரும், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நமது நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். நேற்று வெளியான பேட்டியின் நிறைவுப்பகுதி!
தனியாருக்கு வழங்கிய குப்பை அள்ளும் ஒப்பந்தம் முடிந்து விட்டதா...
குப்பை அள்ளும் பணி தனியாருக்கு மூன்றாண்டுகளுக்கு வழங்கப்பட்டது. ஓராண்டு முடிந்ததும் மாமன்றம் ஒப்புதல் அளித்தால் அடுத்தடுத்த ஆணடுகள் வழங்கலாம் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. சேவை சரியில்லை என மாமன்றம் கருதுவதால், புதிய ஒப்பந்தம் கோரப்படும். அதுவரை குப்பை அள்ள மூன்று மாதத்துக்கு மட்டும் அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளுடன்,பல்வேறு நிபந்தனைகளுடன் புதிய டெண்டர் கோரப்படும்.
குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் வழங்கிய பின்பும், மாநகராட்சி நிதியில் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து, வாகனங்கள் வாங்கிக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன...?
வாகனங்கள் வழங்குவது தொடர்பாக, கொள்கை ரீதியாக முடிவெடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வாகனத்துக்கும் நாளொன்றுக்கு எத்தனை ரூபாய் வாடகை என அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, அவர்களுக்கு வாடகைக்கு வழங்குகிறோம். அத்தொகையை பிடித்தம் செய்து கொள்கிறோம்.
குறிப்பிட்ட சில ஆண்டுகள் மட்டுமே ஒப்பந்தம் கொடுக்கும் பட்சத்தில், அந்நிறுவனத்தினரால் பெரும் பொருட்செலவில் புதிதாக வாகனங்கள் வாங்க முடியாததால், வாடகைக்கு தருகிறோம். நாளொன்றுக்கு எத்தனை டன் குப்பை அள்ளுகிறார்களோ, அதை கணக்கிட்டு பணம் கொடுக்கிறோம்.
'ஸ்மார்ட் சிட்டி'க்கு ஒதுக்கிய தொகை ஆயிரம் கோடி ரூபாயும் செலவாகி விட்டதா... பணிகள் முழுமையாக முடிந்து விட்டதா...?
'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் முழுமையாக முடிந்து விட்டன. 50 கோடி ரூபாய் மட்டும் இருப்பு இருக்கிறது. சில இடங்களில் பணிகள் செய்யாமல் விட்டிருக்கலாம்; தவறு செய்திருக்கலாம். அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. சில இடங்களில் கூடுதல் பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. 'ஸ்மார்ட் சிட்டி' இயக்குனரவை கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, தொகை விடுவிக்க வேண்டியிருக்கிறது.
மாநகராட்சிக்கு சொந்தமான 'ரிசர்வ் சைட்' மீட்க, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறீர்களே...
மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்துபொது ஒதுக்கீட்டு இடங்களை சுற்றிலும், 15 நாட்களுக்குள் 'பென்சிங்' போட்டு, அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட்டுள்ளேன். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மூன்று கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை, மாநகராட்சி பொது நிதியில் செலவிடப்படும். 400க்கும் மேற்பட்ட பொது ஒதுக்கீடு இடங்கள், மாநகராட்சி கமிஷனர் பெயருக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
வருவாய்த்துறை சர்வேயர்கள், தாசில்தார்கள் மற்றும் மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் மற்றும் சர்வேயர்கள் ஆகியோர் ஒரே இடத்தில் அமர்ந்து மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஒதுக்கீடு இடங்கள் தொடர்பான சிக்கல்களை தீர்க்க, நடவடிக்கை எடுக்கப்படும்; அடுத்த வாரம் இப்பணி துவக்கப்படும்.
வர்த்தக நிறுவனங்கள் மிகுந்த ரோடுகளில் பாதசாரிகள் செல்வதற்கான நடைபாதை ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கிறது; உதாரணத்துக்கு உக்கடம் முதல் மில் ரோடு சந்திப்பு வரை ஒப்பணக்கார வீதியை சொல்லலாம். மாநகராட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதே...?
காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதி, தடாகம் ரோடு மற்றும், 86வது வார்டு பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளோம். வர்த்தக நிறுவனங்கள் அதிகமுள்ள ஐந்து முக்கியமான ரோடுகளில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பும், விரைவில் அகற்றப்படும்.
நாங்கள் எந்த வேலை சொன்னாலும் அதிகாரிகள் செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டு கவுன்சிலர்கள் மத்தியில் இருக்கிறது; மாமன்றம் மற்றும் மண்டல கூட்டங்களில் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனரே...
சில கவுன்சிலர்கள் மட்டுமே புகார் கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை அழைத்து பேசி, தீர்வு ஏற்படுத்தி வருகிறோம். இரு தரப்பினரும் அனுசரித்துச் செல்ல வேண்டும்; ஒருங்கிணைப்பு அவசியம். நான் ஒரு உத்தரவு பிறப்பித்தால் கீழுள்ள அதிகாரிகள் வேலை செய்ய வேண்டும்; செய்யவில்லையெனில், 'சிஸ்டம் வேஸ்ட்'.
கவுன்சிலர்கள் மக்களுக்காக வேலை செய்கிறார்கள். கவுன்சிலர்கள் சொல்லும் வேலைக்கு மதிப்பீடு தயாரிக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். பணமில்லை என யாரும் சொல்லாதீர்கள்; கோப்புகளை என்னிடம் அனுப்புங்கள் என கூறியுள்ளேன்.
மக்கள் கவுன்சிலர்களிடம் செல்வார்கள் என்பதால், அவர்களுக்கு உரிய பதிலை அளித்தால் மட்டுமே சமாளிக்க முடியும் என கூறியுள்ளேன்.
கவுன்சிலர்கள் செயல்பாடு எப்படி இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?
தினமும் காலை 7:00 மணிக்கு வார்டுக்குள் 'ரவுண்ட்ஸ்' செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது, எந்தெந்த பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது தெரிய வரும். நிறைய கவுன்சிலர்கள் வார்டுக்குள் செல்கின்றனர். அதேபோல், அனைத்து கவுன்சிலர்களும் செல்ல வேண்டும்.
அரசின் திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும். சில வார்டுகளுக்கு அதிகமாக செய்கிறோம்; சில வார்டுகளுக்கு குறைவாக ஒதுக்குகிறோம் என்ற வேறுபாடு இருக்கத்தான் செய்யும். மக்களை சந்தித்து தேவைகளை கேட்டறிந்து, அதிகாரிகளிடம் முறையிட்டு, தீர்வு காண வேண்டும்.
பெரிய அதிகாரிகள் வரும்போது, அவர்களை சந்திக்க வேண்டும்; பிரச்னைகளுக்கு தீர்வுடன் வர வேண்டும்.
மாநகராட்சி அதிகாரி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்திருக்கிறது; துறை ரீதியாக இன்னும் நடவடிக்கை எடுக்கலையே... ஏன்?
லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கணக்கில் வராத தொகையை கைப்பற்றும் போது, அதற்கான காரணங்கள் கோரப்படும். காரணங்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வந்ததும் 'ஆக்ஷன்' உறுதி. சம்பந்தப்பட்ட அதிகாரி, எந்த நகரத்துக்கு இட மாறுதல் சென்றிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் தகவல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறதே; அதிகாரியின் லேப்-டாப் பேக்கில் பணம் இருந்திருக்கிறது; யாரிடம் வாங்கினேன் என்பதையும் சொல்லி இருக்கிறாரே...?
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் விசாரிக்கப்படும். காரணங்களை கூறி விளக்கினால், பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவோம். 'என்கொயரி'க்கு பின், அத்தொகை லஞ்சப்பணம் என தெரியவந்தால், அறிக்கை அடிப்படையில், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.