தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ தபால் நிலையங்கள் ஏன் தங்க கடன் வழங்கக்கூடாது?

 தபால் நிலையங்கள் ஏன் தங்க கடன் வழங்கக்கூடாது?

 தபால் நிலையங்கள் ஏன் தங்க கடன் வழங்கக்கூடாது?


ADDED : ஜூலை 27, 2026 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 04:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாடு முழுதும் பரந்து விரிந்த தபால் நிலைய வலையமைப்பை கொண்டுள்ள, மத்திய அரசின் 'இந்தியா போஸ்ட்' கிராமப்புறங்களில் மிகப்பெரிய தங்க கடன் வழங்கும் நிறுவனமாக உருவாகும் திறன் கொண்டுள்ளது. ஆனால், அதற்கு தற்போதைய சட்ட மற்றும் ஒழுங்குமுறை அமைப்பில் மாற்றம் அவசியம் என கூறப்படுகிறது.

தற்போது இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க், ஐ.பி.பி.பி., தன் இணையதளத்தில் தங்க நகை கடன் சேவையை வழங்குவதாக குறிப்பிடுகிறது. ஆனாலும், அது நேரடியாக கடன் வழங்குவதில்லை.

வாடிக்கையாளர்களை தன் கூட்டாளி வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களான என்.பி.எப்.சி.,யிடம் அறிமுகப்படுத்தும் பரிந்துரை அமைப்பாக மட்டுமே செயல்படுகிறது. கடன், வட்டி விகிதம், நகை பாதுகாப்பு மற்றும் அபாயம் அனைத்தும் அந்தந்த வங்கிகள், நிறுவனங்களின் பொறுப்பாகும்; இந்தியா போஸ்ட் பரிந்துரை கட்டணத்தை மட்டுமே பெறுகிறது.

உரிமமே தடை


இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க் தற்போது 'பேமென்ட்ஸ் வங்கி' என்பதால், ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி நேரடியாக கடன் வழங்க முடியாது. இதனால், தங்க கடன் சந்தையில் அதன் பங்கு மிகவும் குறைந்த அளவாக உள்ளது.

ஆனால், ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, ஐந்து ஆண்டுகள் செயல்பட்ட பின், ஒரு பேமென்ட்ஸ் வங்கி, சிறு நிதி வங்கியாக, அதாவது ஸ்மால் பைனான்ஸ் பேங்க் என மாற விண்ணப்பிக்கலாம். இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் 2018ல் தொடங்கப்பட்டதால், 2023ம் ஆண்டிலேயே இந்த தகுதியை அது பெற்றுவிட்டது. சிறு நிதி வங்கியாக மாறினால், நேரடியாக கடன் வழங்கும் அதிகாரமும் கிடைக்கும்.

கிராமங்களில் வாய்ப்பு


நம் நாட்டின் குடும்பங்களிடம் 25,000 டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதில் பெரும்பாலானது கிராமப்புறங்களில் சேமிப்பாக உள்ளது. மருத்துவ செலவு, விவசாய முதலீடு, கல்வி, திருமணம் போன்ற அவசர தேவைகளுக்காக பல குடும்பங்கள் தங்கத்தை அடமானம் வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. உடனடி பணமாக்கவும் மீண்டும் மீட்டுக் கொள்ளவும் தங்கம் சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது.

முறையான நிதி நிறுவனங்கள் இல்லாத இடங்களில், மக்கள் தனியார் வட்டிக்காரர்களை நாடுகின்றனர். அவர்கள் மாதத்துக்கு 3 - 5 சதவீதம், அதாவது ஆண்டுக்கு 36 - 60 சதவீதம் வரை நியாயமற்ற வட்டி வசூலிப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் ஒழுங்குபடுத்தப்பட்ட தங்க கடன் சந்தை 2.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தாலும், முறைசாரா சந்தையையும் சேர்த்தால் அது, 7 - 8 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

அபார பலம்


இந்தியா போஸ்டின் கீழ், நாடு முழுதும் 1.65 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில், 1.49 லட்சத்துக்கும் அதிகமானவை கிராமப்புறங்களில் அமைந்துள்ளன. மேலும், 1.36 லட்சம் தபால் நிலையங்கள், வங்கி சேவை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஐந்து கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, நான்கு லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள் வாயிலாக சேவைகள் வழங்கப்படுகின்றன.

இதனுடன் ஒப்பிடுகையில், நாட்டின் மிகப்பெரிய தங்க கடன் வழங்கும், வங்கி சாரா நிதி நிறுவனமான முத்துாட் பைனான்ஸுக்கு, 2024 - 25 நிதியாண்டு முடிவில் 7,391 கிளைகள் மட்டுமே இருந்தன.

அவற்றில் பெரும்பாலானவை நகரங்கள் மற்றும் மாவட்ட தலைமையகங்களில் உள்ளன. ஆனால், இந்தியா போஸ்ட் ஊராட்சி மற்றும் ஒன்றிய மட்டத்துக்கே சென்றடைந்துள்ளதால், தனியார் நிறுவனங்களால் எளிதில் உருவாக்க முடியாத முன்னிலையை பெற்றுள்ளது.

குறைந்த வட்டி கடன்


மத்திய அரசின் ஆதரவு, குறைந்த செலவிலான வைப்பு நிதி மற்றும் லாப நோக்கமற்ற செயல்பாட்டு அமைப்பு ஆகியவற்றால், இந்தியா போஸ்ட் ஆண்டுக்கு 10 - 12 சதவீத வட்டியில் தங்க கடன் வழங்கும் வாய்ப்பு இருப்பதாக, நிதித்துறை நிபுணர்களின் கருத்து உள்ளது.

இது, என்.பி.எப்.சி., எனும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வசூலிக்கும் 12 - 24 சதவீத வட்டியையும், தனியார் வட்டிக்காரர்களின் 36 - 60 சதவீத வட்டியையும் விட மிகக்குறைவாக இருக்கும்.

உதாரணமாக, ஆறு மாதங்களுக்கு 1 லட்சம் ரூபாய் கடன் பெற்றால்:

12% வட்டியில்- ரூ.6,000, 24% வட்டியில் - ரூ.12,000, 48% வட்டியில் -- ரூ.24,000 இதன் வாயிலாக கடனாளி கள் ஆயிரக்கணக்கான ரூபாய் வட்டியை சேமிக்க முடியும் என கூறப்படுகிறது.

இரண்டு வழிகள்


இதற்கு நிபுணர்கள் இரண்டு வழிகளை முன்வைக்கின்றனர். இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க், சிறு நிதி வங்கியாக மாற்றப்பட வேண்டும். இதனால், அது நேரடியாக கடன் வழங்கும் அதிகாரத்தை பெறும். கூட்டு கடன் முறையில், இந்தியா போஸ்ட் வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு கடன் செயல்முறையை மேற்கொள்ள, கூட்டாளி வங்கி அல்லது வங்கி சாரா நிதி நிறுவனம் கடனை வழங்கி, அபாயத்தை ஏற்றுக்கொள்ளும் நடைமுறையை அனுமதிக்கலாம்.

இந்த பரிந்துரைக்கு எதிராகவும் பல வாதங்கள் உள்ளன. கடன் மதிப்பீடு, மோசடி தடுப்பு, தங்கத்தின் தரச்சோதனை, பாதுகாப்பு, ஏல நடைமுறை, கடன் மீட்பு போன்ற துறைகளில் இந்தியா போஸ்டுக்கு அனுபவம் இல்லை என்பதும், முக்கிய கவலையாக பார்க்கப்படுகிறது.

மேலும், பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் வரலாறு மற்றும் கூட்டுறவு வங்கிகளின் தோல்விகளும் எச்சரிக்கையாக குறிப்பிடப்படுகின்றன. இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் தற்போது லாபகரமான நிலையில் இல்லாததால், சிறு நிதி வங்கியாக மாற கூடுதல் மூலதனமும் தேவைப்படும்.

இதற்கு ஆதரவாளர்கள், தங்க கடன்கள் குறைந்த அபாயம் கொண்ட பாதுகாப்பான கடன் வகை என்பதை குறிப்பிடுகின்றனர். நகை நேரடியாக அடமானமாக இருப்பதால், வாராக்கடன்களை நகை ஏலத்தின் வாயிலாக எளிதாக மீட்க முடியும். தங்கத்தின் மதிப்பீடு, பாதுகாப்பு, கருவிகள் வாயிலாக துாய்மை பரிசோதனை போன்றவை, ஏற்கனவே வங்கி சாரா நிதி நிறுவன துறையில் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளன என்பதும், இதை ஆதரிப்பவர்களின் கருத்தாக உள்ளது.

மேலும், நாடு முழுதும் 10,000 தங்கக் கடன் மையங்கள் உருவாக்கப்பட்டால், மதிப்பீட்டாளர்கள், கடன் அலுவலர்கள் உள்ளிட்ட பணிகளில் ஒரு லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாகும் என கணிக்கப்படுகிறது.

இந்தியா போஸ்ட் தற்போது தங்க கடனுக்கான பரிந்துரை அமைப்பாக மட்டுமே செயல்படுகிறது. ஆனால், சிறு நிதி வங்கி உரிமம் கிடைத்தால், கிராமப்புற மக்களுக்கு குறைந்த வட்டியில் நேரடியாக தங்க கடன் வழங்கும் திறன் அதற்கு இருக்கிறது.

நாட்டின் மிகப் பெரிய தபால் நெட்வொர்க், ஏற்கனவே உள்ள வங்கி அடித்தளம் மற்றும் ஒழுங்குமுறை வாய்ப்பு ஆகியவற்றால் இதை நடைமுறைப்படுத்துவது, அரசின் கொள்கை முடிவை பொறுத்தது என்கின்றனர் நிபுணர்கள்.

- தல்லம் ஸ்ரீகுமார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us