அன்புமணியை நீக்காதது ஏன்? பா.ம.க., ராமதாஸ் புது விளக்கம்
அன்புமணியை நீக்காதது ஏன்? பா.ம.க., ராமதாஸ் புது விளக்கம்
UPDATED : ஆக 08, 2025 10:40 AM
ADDED : ஆக 08, 2025 03:59 AM

சென்னை: ''அன்புமணி மீது நடவடிக்கை எடுத்தால், நான் வளர்த்த கட்சியை, நானே அழித்தது போன்றதாகி விடும்,'' என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் நேற்று, அவர் அளித்த பேட்டி:
'பா.ம.க.,வுக்கு தற்போது அங்கீகாரமும் இல்லை; சின்னமும் இல்லை. எனவே, வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்தையும், நான் தலைமையேற்று தீர்மானிப்பேன்' என கூறினேன்.
அதை ஏற்க அன்புமணிக்கு மனமில்லை; பிடிவாதமாக இருக்கிறார். கட்சி நிர்வாகிகளை நியமிக்கும், நீக்கும் அதிகாரம் என்னிடம்தான் இருக்க வேண்டும். இதுதான் கட்சிக்கு நல்லது.
அன்புமணியிடம் கட்சியை கொடுத்து விட்டு, 'டம்மி'யாக இருக்க என்னால் முடியாது. அவருடன் பேச நான் தயாராகத்தான் இருந்தேன். ஆனால், அவர் தைலாபுரம் வந்து, அவருடைய அம்மாவை மட்டும் பார்த்து செல்கிறார். ஆனால், பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.
அன்புமணியின் மூன்றாண்டு கால தலைவர் பதவிக்கான காலம், கடந்த ஜூன் மாதத்தோடு முடிந்து விட்டது. இப்போது, பா.ம.க.,வுக்கு நிறுவனரும், தலைவரும் நான்தான். என்னை குலதெய்வமாக, கடவுளாக நினைக்கும் பா.ம.க., பொறுப்பாளர்களுக்கு பணத்தை கொடுத்து, தன் பக்கம் அன்புமணி இழுத்து வருகிறார்.
அன்புமணியை தர்மபுரியில் எம்.பி.,யாக்கியதில் இருந்து, எனக்கு தெரியாமல், கட்சி பொறுப்பாளர்களை தன் பக்கம் இழுக்கும் உள்ளடி வேலைகளை செய்து வந்திருக்கிறார் என்பதை, கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிந்து கொண்டேன்.
பா.ம.க., எனும் ஆலமரத்தை தண்ணீருக்கு பதிலாக, வியர்வையை ஊற்றி வளர்த்தேன். அந்த ஆலமரத்தின் ஒரு கிளையை வெட்டி, கோடாரி செய்து, அதைக் கொண்டு, அந்த மரத்தையே வெட்ட நினைக்கின்றனர். கட்சி நலன், வளர்ச்சிக்காக எதை சொன்னாலும், அன்புமணி கேட்பதில்லை.
அவர் மீது நான் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நான் வளர்த்த கட்சியை, நானே அழிப்பது போன்றதாகி விடும். கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்களை அதல பாதாளத்தில், அவர் தள்ளி விடுவார். அதனால்தான், அன்புமணிக்கு செயல் தலைவர் பதவி கொடுத்தேன்.
என் மீது உயிரையே வைத்திருக்கும் தர்மபுரியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர், என்னை சந்திக்க வருவதாக இருந்தார். தர்மபுரி எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், அவரிடம் 5,000 ரூபாய் கொடுத்து, ராமதாசை சந்திக்க செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். அதை வாங்காமல், அவர் என்னை வந்து சந்தித்தார்.
என்னை சந்திக்க வருபவர்களை தடுக்க, பணம் கொடுக்கின்றனர். 16 ஆண்டுகள் பொதுச்செயலராக இருந்த வடிவேல் ராவணனை அழைத்து, பழைய 'இன்னோவா' காரை கொடுத்து, தன் பக்கம் வளைத்து விட்டனர். அவர் ஏமாந்து விட்டார். அவருக்கு புது கார் வாங்கிக் கொடுத்திருக்கலாம்.
அன்புமணியின் மாமனாரும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து, நடந்த சம்பவங்களை ஒரு மணி நேரம் எடுத்துக் கூறினேன். அதன்பின், அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அதேபோல, அன்புமணியின் மைத்துனரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான விஷ்ணு பிரசாத்தை, நானே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'நேரில் வாருங்கள், பேச வேண்டும்' என்றேன். வருகிறேன் என்று சொன்னவரிடம் இருந்து, மரியாதை நிமித்தமாக கூட பதில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
'எனக்கு தெரியாமல் முகவரியை மாற்றி விட்டார்'
பா.ம.க.,வின் தலைமை அலுவலகம், சென்னை, தேனாம்பேட்டை, நாட்டுமுத்து நாயக்கன் தெருவில் தான் இருந்தது. எனக்கு தெரியாமல், கட்சி தலைமை அலுவலகத்தை, தி.நகர் திலக் தெருவுக்கு அன்புமணி மாற்றியுள்ளார். கட்சி தலைமை அலுவலகத்தை, தைலாபுரம் தோட்டத்திற்கு மாற்ற, சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறோம். பா.ம.க.,வுக்கு மாம்பழம் சின்னத்தை, தேர்தல் ஆணையம் கொடுக்கவில்லை. ஆனால், பொய்யான தகவலை கூறி, பொறுப்பாளர்களுக்கு ஆசை காட்டுகின்றனர். அன்புமணியிடம் சென்ற மவட்டச் செயலர்கள், மீண்டும் என்னிடம் வர ஆசைப்படுகின்றனர். அவர்கள் வந்தால், ஏற்றுக் கொள்வேன். - ராமதாஸ்