குற்றவாளி போல நடத்துகின்றனர்; தி.மு.க., நிர்வாகி மீது மனைவி புகார்
குற்றவாளி போல நடத்துகின்றனர்; தி.மு.க., நிர்வாகி மீது மனைவி புகார்
ADDED : மே 23, 2025 04:12 AM

சென்னை : ''புகார் கொடுத்த என்னையே, குற்றவாளி போல போலீசார் நடத்துகின்றனர்,'' என, அரக்கோணம் தி.மு.க., முன்னாள் நிர்வாகியால், பாதிக்கப்பட்ட அவரது 2வது மனைவி கண்ணீர் மல்க தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த கல்லுாரி மாணவி, அரக்கோணம் காவனுாரை சேர்ந்த, தி.மு.க., இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருந்த தெய்வசெயல் என்பவரை, ஜனவரி மாதம் திருமணம் செய்தார்.
ஏற்கனவே திருமணமானதை மறைத்து, தன்னை திருமணம் செய்து, அடித்து துன்புறுத்துவதாகவும், கட்சி பிரமுகர்களின் பாலியல் இச்சைக்கு இணங்கும்படி கொடுமைப்படுத்துவதாகவும், ஏப்ரல், 5ம் தேதி, அப்பெண் தற்கொலைக்கு முயன்றார்.
தெய்வசெயல் மீது, ராணிப்பேட்டை எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் தெய்வசெயல் முன்ஜாமின் பெற்றுள்ளார்.
இந்நிலையில் புகார் அளித்த அவரின் மனைவி, போலீசார் முறையாக விசாரிக்கவில்லை. சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி, கவர்னரிடம் மனு அளிப்பதற்காக, நேற்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு வந்தார்.
போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். கவர்னர் சென்னையில் இல்லை. கிண்டியில் உள்ள ஆர்.டி.ஓ.,விடம் புகார் கொடுங்கள் எனக்கூறி, பெண் காவலர்கள் அவரை ஆட்டோவில் அழைத்து சென்றனர்.
ஆட்டோ ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்லாமல், கோயம்பேடு நோக்கி சென்றதால், அந்த பெண் எங்கே அழைத்து செல்கிறீர்கள் என்று கேட்டு, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். பின் தனது ஊருக்கு செல்வதாகக் கூறி, ஆட்டோவில் இருந்து இறங்கி சென்றார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க கூறியதாவது:
பாதிக்கப்பட்ட என்னையே போலீசார் குற்றவாளி போல நடத்துகின்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விட்டோம் என்கின்றனர்.
ஆனால், முதல் தகவல் அறிக்கையை கொடுக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்ட தெய்வசெயலை அழைத்து விசாரிக்காமல், புகார் கொடுத்த என்னை சுற்றி அதிகாரிகள் அமர்ந்து கொண்டு, தேவையற்ற கேள்விகளை கேட்டு அலைக்கழிக்கின்றனர்.
எனவே, வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி, நீதி பெற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.