மதம் மாற்றும் கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
மதம் மாற்றும் கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
ADDED : மார் 15, 2026 04:03 AM

சென்னை: தஞ்சை மாவட்டம், திருநறையூரில் மதமாற்றத்தை தடுத்த நபர் மீது நடவடிக்கை எடுத்து, மதமாற்ற கும்பலுக்கு ஆதரவாக, போலீசார் செயல்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதுார், திருநறையூர் வள்ளுவர் தெருவில், சில நாட்களுக்கு முன், 9 பேர் கொண்ட கும்பல், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று, கிறிஸ்துவ மத பிரசாரம் செய்து, புத்தகங்களை வழங்கியது சர்ச்சைக்குள்ளானது.
அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யன், 30. இவர் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மக்கள் தொடர்பாளராக உள்ளார். மதமாற்றம் செய்த நபர்களை தடுத்து நிறுத்தி, சரமாரி கேள்விகளை கேட்டு, அதை வீடியோவாக பதிவு செய்தார்.
நாச்சியார்கோவில் போலீசார் அங்கு வந்தனர். அந்த கும்பல் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது. அப்பகுதி மக்களின் எதிர்ப்பை பார்த்ததும், அக்கும்பலை போலீசார் அனுப்பி வைத்தனர்.
அக்கும்பலிடம் ஆதித்யன் விவாதம் செய்யும் வீடியோ பதிவு, சமூக வலைதளத்தில் பரவியது. அதையடுத்து ஆதித்யன், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக நடந்ததாக, அவரை கைது செய்தனர்.
ம தமாற்றத்தில் ஈடுபட்ட கும்பல் மீது, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அதை தடுத்தவர் மீது வழக்கு பதிந்திருப்பது ஏற்புடையது அல்ல என, அப்பகுதியினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து, மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர் திலிப்குமார் கூறியதாவது:
சம்பவத்தன்று, நாச்சியார்கோவில் காவல் துறையினர் வந்து, இரு தரப்பினரையும் அனுப்பி வைத்தனர். மறுநாள் காலை ஆதித்யனை, அவரது வீட்டில் போலீசார் கைது செய்தனர். ஆனால், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது, உரிய வீடியோ ஆதாரம் இருந்தும், அதை காவல் துறையினர் புறந்தள்ளி விட்டு, ஒரு மதத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர்.
மதமாற்றத்தை தடுத்த ஆதித்யன் மீது மட்டும் வழக்கு பதிந்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவரது தரப்பில் நான் ஆஜராகி, காவல் துறையினர் ஹிந்துக்களுக்கு, எதிராகவும், ஒரு தலைபட்சமாகவும், விரோதமாகவும் செயல்பட்டுள்ளதாக தெரிவித்தேன்.
அதன் அடிப்படையில், நீதிமன்றம் ஆதித்யனை பிணையில் விடுவித்தது. மதமாற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது எவ்வித வழக்கும் பதியவில்லை. மாறாக, அவர்களுக்கு ஆதரவாக, போலீசார் இருந்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

