தமிழகத்தை புறக்கணிக்கும் 'ஏர் இந்தியா' நிறுவனம்: சர்வதேச விமான சேவைகள் அதிகரிக்கப்படுமா?
தமிழகத்தை புறக்கணிக்கும் 'ஏர் இந்தியா' நிறுவனம்: சர்வதேச விமான சேவைகள் அதிகரிக்கப்படுமா?
UPDATED : ஜூன் 19, 2025 12:37 PM
ADDED : ஜூன் 18, 2025 11:22 PM

தமிழகத்தில், 'இந்தியன் ஏர்லைன்ஸ்' நிறுவனம் இயக்கிய விமான சேவைகளை, 'ஏர் இந்தியா' நிறுவனம் புறக்கணித்து வருவதால், விமான போக்குவரத்தில் தமிழகம் பின்னுக்கு தள்ளப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், கடந்த 1953ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தது.
வளர்ச்சி
மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே, விமான போக்குவரத்தை விரிவுப்படுத்தி, பயணியருக்கு சிறப்பான விமான சேவைகளை வழங்கி வந்தது. குறிப்பாக சென்னை, டில்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து, உள்நாடு மற்றும் வெளிநாடு சேவைகளை வழங்கியது.
இதன் காரணமாக, தென் மாநிலங்களில் விமான போக்குவரத்து வளர்ச்சி கணிசமாக உயர்ந்தது. 2007ம் ஆண்டு நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனமாக இந்தியன் ஏர்லைன்ஸ் மாறியதால், ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
இந்தியன் ஏர்லைன்ஸ் காலகட்டத்தில், தமிழகத்தில் இருந்து துபாய், சார்ஜா, சிங்கப்பூர் என, பல நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. ஏர் இந்தியாவுடன் இணைந்த பின், தமிழகத்துக்கான சேவைகள் பறிபோய் உள்ளன.
மாநிலத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் நோக்கில், பாரபட்சமாக செயல்படுவதாக, ஏவியேஷன் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, விமான போக்குவரத்து வல்லுநர் உபையதுல்லாஹ் கூறியதாவது:
இந்தியன் ஏர்லைன்ஸ் காலகட்டத்தில் சென்னையில் இருந்து, 10 முக்கிய சர்வதேச நகரங்களுக்கு, 68க்கும் மேற்பட்ட சேவைகள் கிடைத்தன.
கடந்த 20 ஆண்டுகளில் சர்வதேச விமான போக்குவரத்தில், தமிழகம் மிக பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கேற்ப புது வழித்தடங்களுக்கான தேவைகளும் உள்ளன.
ஆனால், ஏர் இந்தியாவை விட வெளிநாட்டு விமான நிறுவனங்களே இங்கிருந்து விமானங்களை இயக்கி வருகின்றன; ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு பெயரளவில் மட்டுமே உள்ளது.
சவுதி அரேபியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக விமான தேவைகள் உள்ளன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், தமிழகத்தை 'ஹப்' ஆக வைத்திருந்தது; ஏர் இந்தியா வந்தபின் முற்றிலும் மாறி விட்டது.
வெளிநாட்டு விமான நிறுவனங்களை நம்பித் தான் தமிழக விமான நிலையங்கள் இன்று உள்ளன.
இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு விமானங்களை இயக்கினால், வர்த்தக ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும்; இப்படி இருந்தும் ஏர் இந்தியா தமிழக நகரங்களை கண்டு கொள்ளாதது, திட்டமிட்டு பின்னுக்கு தள்ளும் வேலையாக தெரிகிறது.
கோவா, கொச்சியில் இருந்து லண்டனுக்கு, ஏர் இந்தியா விமான சேவை வழங்க முன்வந்துள்ளது; இதை சென்னையில் இருந்து இயக்கி இருக்கலாமே என்ற கேள்வி எழுகிறது.
ஆதிக்கம்
சர்வதேச போக்குவரத்தில், திருச்சி 11ம் இடத்தில் உள்ளது; ஆனால், ஏர் இந்தியாவின் எந்த சேவையும் இங்கு இல்லை. வட மாநிலங்களில் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
ஆமதாபாத், அமிர்தசரஸ் உள்ளிட்ட நகரங்களில் இருந்து உள்நாட்டு சேவைகளையும் வழங்குகிறது. டில்லியில் இருந்து 60க்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஏர் இந்தியா விமானங்களை இயக்குகின்றனர்.
ஆனால், சென்னையில் இருந்து இயக்கப்படுவது வெறும் மூன்று விமானம் மட்டுமே. 'பிரீமியம்' வகை விமான சேவை வழங்கும் ஏர் இந்தியா விமான நிறுவனம், தமிழக பயணியரும் பயன்படுத்தும் வகையில் சேவைகளை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், சென்னை விமான நிலையம் என்றால் மார்தட்டிக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. ஏர் இந்தியா நிறுவனம் எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. ஏர்போர்ட்களில் உள்கட்டமைப்பு, சர்வதேச தரத்தை உயர்த்த வேண்டும் என, மத்திய அரசிடம் சொல்கிறோம். அவர்கள் எதையும் கண்டுகொள்வதில்லை. - வில்சன், தி.மு.க., எம்.பி.,
![]() |