தீபாவளி சிறப்பு ரயில்கள் முன்கூட்டியே அறிவிக்கப்படுமா?
தீபாவளி சிறப்பு ரயில்கள் முன்கூட்டியே அறிவிக்கப்படுமா?
ADDED : செப் 18, 2024 01:32 AM

சென்னை : தீபாவளிப் பண்டிகையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக முன்கூட்டியே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தீபாவளி பண்டிகை அக். 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. ரயில் டிக்கெட் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி தீபாவளி முன்பதிவு ஜூலை 1, 2 தேதிகளில் நடந்தது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, பாண்டியன், பொதிகை, முத்துநகர் உட்பட முக்கிய ரயில்களில் சில நிமிடங்களில் முன்பதிவு முடிந்தது. அதனால் சிறப்பு ரயில்கள் அறிவிப்புக்காக பயணியர் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து பயணியர் சிலர் கூறியதாவது:
சென்னையில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் வரும் தீபாவளிப் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வர். வழக்கமாக இயக்கப்படும் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது. சிறப்பு ரயில்களை எப்போது அறிவிப்பர் என எதிர்பார்த்து உள்ளோம்.
கடந்த சில ஆண்டுகளாக தீபாவளிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே சிறப்பு ரயில்களை அறிவிக்கின்றனர். இதனால் பயணியர் தங்களது பயணத்தை திட்டமிட முடியவில்லை. எனவே சிறப்பு ரயில்களை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். அதிலும் டிக்கெட் கிடைக்காத சூழலில், மாற்றுப் போக்குவரத்துக்கு திட்டமிட முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'தீபாவளிப் பண்டிகைக்கு எந்தெந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்பது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும். காத்திருப்போர் பட்டியல் அதிகமாக உள்ள வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குவது வாய்ப்புள்ள விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றனர்.