'மதச்சார்பின்மை, சோஷலிசம்' வார்த்தைகள் அரசியலமைப்பில் நீக்கப்படுமா? பா.ஜ., தயங்குவது ஏன்?
'மதச்சார்பின்மை, சோஷலிசம்' வார்த்தைகள் அரசியலமைப்பில் நீக்கப்படுமா? பா.ஜ., தயங்குவது ஏன்?
UPDATED : ஜூலை 06, 2025 04:47 AM
ADDED : ஜூலை 05, 2025 11:43 PM

நம் அரசியலமைப்பு முகவுரையில் இடம்பெற்றுள்ள, 'சோஷலிசம், மதச்சார்பின்மை' வார்த்தைகளை நீக்கும்படி ஆர்.எஸ்.எஸ்., முன்வைத்துள்ள கோரிக்கையை பா.ஜ., அரசு செயல்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை நிறைவேற்றினால் அது பா.ஜ., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதாலேயே, பிரதமர் மோடி மவுனம் காப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 1976ல், 'எமர்ஜென்சி' எனப்படும், அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, நம் அரசியலமைப்பு சட்டம், 42வது முறையாக திருத்தப்பட்டது.
எப்போதும் இல்லாத அளவுக்கு, 'மினி அரசியலமைப்பு' எனக் கூறும் அளவுக்கு ஏராளமான திருத்தங்கள் அப்போது மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக, 'சோஷலிசம், மதச்சார்பின்மை' போன்ற வார்த்தைகள் அரசியலமைப்பு முகவுரையில் புதிதாக சேர்க்கப்பட்டன.
அடிப்படை உரிமை
அவ்வாறு சேர்க்கப்பட்ட இரு வார்த்தைகளையும், அரசியலமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சமீபத்தில் தெரிவித்துள்ளது.
அவசரநிலையின், 50 ஆண்டுகள் நிறைவை நினைவுகூரும் வகையில் டில்லியில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ்., பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹோசபலே, 'அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பின் முகவுரையில் சோஷலிசம் மற்றும் மதச்சார்பற்ற என்ற வார்த்தைகள் இடம் பெறவில்லை.
'அவசரநிலையின் போது, அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு பார்லிமென்ட் செயல்படாமல் முடங்கியது. நீதித்துறையும் முடங்கியது. அதன்பின்னரே, இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டன.
'ஆகவே இந்த இரு வார்த்தைகளையும், அரசியலமைப்பு முகவுரையில் இருந்து நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்' என்றார்.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சூடு பிடித்தது. வடகிழக்கு மாநிலமான அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, 'மதச்சார்பின்மை என்பது, 'சர்வ தர்ம சம்பவா' எனப்படும், 'அனைத்து மதத்திற்கும் சரிசமமான மரியாதை' என்ற இந்திய கருத்துக்கு எதிரானது.
'அதேபோல சோஷலிசம் ஒருபோதும் நம் பொருளாதாரக் கண்ணோட்டமாக இருந்தது இல்லை. நம் பார்வை, 'சர்வோதய அந்த்யோதயா' எனப்படும், ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் வளர்ச்சியை மையமாக வைத்தே இருந்துள்ளது' என்றார்.
அவரைத் தொடர்ந்து, 'இது நீதிக்கு இழைக்கப்பட்ட அநீதி. சனாதன உணர்வுக்கு இழைக்கப்பட்ட பங்கம்' என, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் விமர்சித்தார்.
மவுனம்
பா.ஜ., தலைவர்கள் பலரும் இதை வன்மையாக கண்டித்தவுடன், தொலைக்காட்சி, சமூக வலைதளங்களில் விவகாதங்கள் சூடுபிடித்தன.
மத்திய அரசுக்கு இந்த விவகாரம் நெருக்கடியை கொடுத்திருந்தாலும், பா.ஜ., தலைமை  மவுனம் காத்து வருகிறது.
அதற்கு காரணம், அக்கட்சியின் அரசியலமைப்பு விதிகளிலும் இந்த இரண்டு வார்த்தைகளும் உள்ளன. 2014ல், பிரதமர் மோடி, 'மதச்சார்பின்மை நம் ரத்தத்தில் ஓடுகிறது' என, கூறியிருந்ததும் இந்த மவுனத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
ஒருவேளை, இந்த இரு வார்த்தைகளையும் அரசியலமைப்பில் இருந்து நீக்கினால், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் அதிருப்திக்கு ஆளாக வேண்டிய நிலை பா.ஜ.,வுக்கு ஏற்படும்.
இதை சாக்காக வைத்து, பா.ஜ.,வை கடித்து குதற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு ஏற்படும். அரசியலமைப்பில் கை வைப்பதால் ஏற்படும் விளைவுகளை, கடந்த லோக்சபா தேர்தலிலேயே பா.ஜ., அறுவடை செய்துள்ளது.
எனவே, அது தொடர்பான சோதனை முயற்சியில் மீண்டும் ஈடுபட அக்கட்சி விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ்., உட்பட, சொந்தக் கட்சி தலைவர்களின் விருப்பத்துக்கு பா.ஜ., தலைமை தலை சாய்க்குமா என்பது தற்போதைய நிலையில் கேள்விக்குறியாகவே உள்ளது
- நமது சிறப்பு நிருபர் -.

