தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., நீடிக்குமா?: சமூக வலைதளத்தில் தி.க.,வினருடன் மோதல்
தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., நீடிக்குமா?: சமூக வலைதளத்தில் தி.க.,வினருடன் மோதல்
ADDED : அக் 24, 2025 01:09 AM

'தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., நீடிக்குமா, விலகுமா என்பது தொடர்பாக, சமூக வலைதளங்களில், தி.க., துணைப் பொதுச்செயலர் மதிவதனி, ம.தி.மு.க., துணைப் பொதுச்செயலர் ரொக்கையா இடையே, கருத்து மோதல் ஏற்பட்டிருப்பது, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில், தனியார், 'டிவி' விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற, தி.க., துணைப் பொதுச்செயலர் மதிவதனி, 'தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், வி.சி.க., இ.கம்யூ., மா.கம்யூ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு செல்லாது' என்றார்.
தி.மு.க., கூட்டணி கட்சிகளின் பெயர்களை பட்டியலிட்ட மதிவதனி, ம.தி.மு.க.,வை குறிப்பிடாததால், அக்கட்சி தி.மு.க., கூட்டணியில் நீடிக்குமா என்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.
தவிர்க்க முடியாத சக்தி இதனால், ம.தி.மு.க., துணைப் பொதுச்செயலர் ரொக்கையா ஆவேசமடைந்தார். மதிவதனிக்கு, சமூக வலைதளங்களில், சில கேள்விகளை அவர் பதிவிட்டார்.
அதன் விபரம்:
கடந்த எட்டு ஆண்டுகளாக, தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., இருக்கிறது. மதிவதனி பேசும்போது, ம.தி.மு.க., வை திட்டமிட்டு தவிர்த்தது யாருடைய அஜெண்டா? இது மதிவதனியின் தனிப்பட்ட கருத்தா அல்லது தி.க., தலைவர் வீரமணியின் ஒப்புதல் பெற்ற கருத்தா என, தெரியவில்லை.
தமிழக அரசியல் களத்தில், ம.தி.மு.க., தவிர்க்க முடியாத சக்தி என்பது வீரமணிக்கு தெரியும். மேடையில் நன்றாக பேசும் மதிவதனியை, சமூக வலைதளங்களில் அளவுக்கு அதிகமாக துாக்கி பிடித்தவர்கள், ம.தி.மு.க.,வினர் என்பதை மறந்து விடக்கூடாது.
வைகோவின் கருத்தா தி.மு.க., கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தவிர்த்து பேச, மதிவதனி பயப்படுவார். ம.தி.மு.க., தொண்டர்கள் ஏன் இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்க... முடியல...
இவ்வாறு ரொக்கையா பதிவிட்டுள்ளார்.
இதற்கு, பதிலடி தரும் வகையில், தி.க.,வினர், 'ரொக்கையாவின் கேள்விகள், அவரது தனிப்பட்ட கருத்தா அல்லது ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் கருத்தா' எனக் கேட்டுள்ளனர்.
தி.க., -ம.தி.மு.க., வினர், சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது, தி.மு.க., கூட்டணியில் சலசலப்பை உருவாக்கி உள்ளது.
- நமது நிருபர் -

