நிரந்தரமாக்கப்படுமா சிறப்பு ரயில்கள்: தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
நிரந்தரமாக்கப்படுமா சிறப்பு ரயில்கள்: தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 10, 2025 05:04 AM

ஸ்ரீவில்லிபுத்துார் : தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் விடுமுறை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களான மதுரை, செங்கோட்டை, திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற தென் மாவட்ட நகரங்களுக்கு வந்து செல்ல தேஜஸ், வந்தே பாரத், குருவாயூர், வைகை, கொல்லம், பொதிகை, சிலம்பு, முத்து நகர், நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, பாண்டியன் உட்பட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கி வருகின்றன.
ஆனாலும் விடுமுறை நாட்களில் வெயிட்டிங் லிஸ்ட் நிலை அதிகம் உள்ளதால் வாரத்தில் ஒரு நாள், இரு நாள், மூன்று நாட்கள் என சில சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.
அந்த வகையில் திருநெல்வேலி- - மேட்டுப்பாளையம், தாம்பரம்- - கொச்சுவேலி (திருவனந்தபுரம் வடக்கு), ரயில்கள் வாரத்தில் ஒருநாளும், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயில் வாரத்தில் இரண்டு நாளும், தாம்பரம் -- செங்கோட்டை, சென்னை சென்ட்ரல் -- போடி ரயில்கள் 3 நாள் சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகிறது.
மேலும் பல ஆண்டுகளாக சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலும் வாரத்தில் மூன்று நாள் மட்டுமே இயங்குகிறது. தேனி மாவட்டத்திற்கு என தினசரி ரயிலும் இயக்கப்படவில்லை. இதனால் தென் மாவட்ட மக்கள் தொடர்ந்து சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
அதிக வருமானம் வரும் தென் மாவட்ட நகரங்களுக்கு இத்தகைய சிறப்பு ரயில்களை நிரந்தரமாக இயக்குவதில் ரயில்வே நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பின்னர் இயக்கப்பட்ட கொல்லம் எக்ஸ்பிரஸ், பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிரந்தர ரயிலாக தினமும் இயங்கி வருகிறது.
எனவே மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் தற்போது சிறப்பு ரயிலாக இயங்கும் அனைத்து ரயில்களையும் தினசரி ரயிலாக இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்