கேரளாவில் மாற்று கட்சியினரை இழுக்கும் பா.ஜ., முயற்சி பயன் தருமா?
கேரளாவில் மாற்று கட்சியினரை இழுக்கும் பா.ஜ., முயற்சி பயன் தருமா?
UPDATED : மார் 11, 2024 05:46 AM
ADDED : மார் 11, 2024 02:11 AM

திருவனந்தபுரம்: கேரளாவில், இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக மற்ற கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் பா.ஜ.,வின் முயற்சி பலன் அளிக்காது என, காங்., மற்றும் இடதுசாரிகள் தெரிவிக்கின்றனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
சுற்றுப்பயணம்
வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் பா.ஜ., இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கைப்பற்ற மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என, சமீபத்தில் கேரளா வந்த பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
அடுத்தடுத்து கேரள சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர், பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் அடுத்தடுத்து துவங்கி வைத்தார்.கேரளாவில், முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ சமூக மக்கள் கணிசமாக வாழ்கின்றனர். எனவே, கிறிஸ்துவ மக்களின் ஆதரவை பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது.
காங்., மூத்த தலைவரான ஏ.கே.அந்தோணியின் மகன், அனில் கே.அந்தோணியை பா.ஜ., தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டது.
பல்வேறு கட்சிகளில் அங்கம் வகித்து, மதச்சார்பற்ற கேரள ஜனபக்ஷம் என்ற கட்சியை நடத்தி வந்த மூத்த தலைவர் பி.சி.ஜார்ஜ் பா.ஜ.,வில் இணைந்தார்.
இவை, கேரளாவில் சிறுபான்மையினர் ஓட்டுகளை பா.ஜ.,வுக்கு பெற்றுத்தரும் என அக்கட்சி நம்புகிறது.
மேலும், இரு மத்திய அமைச்சர்களான ராஜீவ் சந்திரசேகர் மற்றும் வி.முரளீதரனை திருவனந்தபுரம் மற்றும் அட்டிங்கல் தொகுதிகளில் பா.ஜ., நிறுத்துகிறது.
ஆதரவு
நடிகர் சுரேஷ் கோபியை திருச்சூரிலும், அனில் கே.அந்தோணியை பத்தனம்திட்டா தொகுதியிலும் நிறுத்துகிறது. இது, பா.ஜ.,வின் ஓட்டு வங்கியை மும்மடங்கு அதிகரிக்கும் என, கூறப்படுகிறது.
மேலும், மோடியின் உத்தரவாதம் பா.ஜ.,வுக்கு மிகப் பெரிய பலமாக அமையும் என்றும் கேரள பா.ஜ., மூத்த தலைவர் ஜார்ஜ் குரியன் தெரிவித்தார்.
''பா.ஜ.,வின் கொள்கைகளுக்கு கேரளாவில் ஆதரவு கிடைக்காது என்பதை அக்கட்சி தலைமை நன்றாகவே புரிந்து வைத்துள்ளது. எனவே தான், பிற கட்சி தலைவர்கள், சினிமா நடிகர்களை நம்பி தேர்தலில் களம் காண்கிறது.
''இதுபோன்ற தந்திரங்கள் கேரளாவில் எடுபடாது,'' என, காங்., - எம்.எல்.ஏ., மேத்யூ குழல்நாடன் தெரிவித்தார்.
கேரள முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகளும், காங்., மூத்த தலைவர் முரளீதரனின் சகோதரியுமான பத்மஜா வேணுகோபால் பா.ஜ., இணைந்துள்ளது அக்கட்சிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
ஆனால், இது பா.ஜ.,வுக்கு சாதகமாக அமைய வாய்ப்பில்லை என்றும், காங்கிரஸ் கட்சியின் நம்பகத்தன்மையை சிதைப்பதுடன் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு சாதகமாக அமையும் என்றும் அக்கட்சியினர் கருதுகின்றனர்.

