பட்ஜெட்டில் அறிவித்த மெட்ரோ ரயில் திட்டங்கள்: நிறைவேற்ற பங்களிப்பு தருமா மத்திய அரசு
பட்ஜெட்டில் அறிவித்த மெட்ரோ ரயில் திட்டங்கள்: நிறைவேற்ற பங்களிப்பு தருமா மத்திய அரசு
ADDED : மார் 16, 2025 12:44 AM

சென்னை: தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டங்களை தாமதம் இன்றி செயல்படுத்த, மத்திய அரசின் பங்களிப்பு அவசியமானது.
மத்திய, மாநில அரசுகளின் தலா 50 சதவீதம் என்ற பங்களிப்போடு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒப்புதல்
சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தின் வரவேற்பை தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
கோவை அவினாசி - சத்தியமங்கலம் மெட்ரோ திட்டம், 10,740 கோடி ரூபாயிலும், மதுரை திருமங்கலம் - ஒத்தக்கடை இடையே, 11,368 கோடி ரூபாயிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதேபோல, சென்னையில் விமான நிலையம் - கிளாம்பாக்கம், 9,335 கோடி ரூபாய்; கோயம்பேடு - ஆவடி - பட்டாபிராம், 9,744 கோடி; பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதுார், 8,779 கோடி ரூபாயில் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு புதிய மெட்ரோ ரயில் திட்டத்துக்கும், முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வுக்கு பின், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இந்த அறிக்கை, மாநில அரசு வாயிலாக மத்திய அரசின் ஒப்புதலுக்கு செல்லும்.
இதற்கு, மத்திய அரசு உரிய ஒப்புதல் அளித்த பின், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்யப்படும். இதையடுத்து, திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு, மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
சென்னையில் தற்போது இரண்டாவது கட்டமாக, 118 கி.மீ., துாரத்துக்கு, 63,246 கோடி ரூபாயில் பணிகள் நடந்து வருகின்றன.
மாதவரம் - சிறுசேரி சிப்காட்; கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பணிமனை; மாதவரம் - சோழிங்கநல்லுார் வரை பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இதையடுத்து, சென்னையில் மேலும் பல வழித்தடங்களிலும், கோவை, மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசின் பங்களிப்பு மிகவும் அவசியமானதாக இருக்கிறது.
வலியுறுத்தல்
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையை தொடர்ந்து மதுரையில், 11,368 கோடி ரூபாயிலும், கோவையில், 10,740 கோடி ரூபாயிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, கூடுதல் ஆவணங்களை இணைத்து, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதேபோல, சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்துக்கான அறிக்கையையும் அனுப்பி உள்ளோம்.
மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு போதிய நிதி மற்றும் கடன் வசதி செய்து தருமாறு, மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசும் ஆர்வம் காட்டி வருகிறது. எனவே, தாமதம் இன்றி பணிகள் துவங்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: அரசியலை தாண்டி மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில், அரசுகள் தயங்கக்கூடாது. மத்திய அரசு அளிக்கும் உத்தரவாதத்தின் அடிப்படையில் தான், உலக வங்கிகள் அல்லது பன்னாட்டு நிதி நிறுவனங்கள், மாநிலங்களுக்கு கடன் வசதி செய்து தரும்.
சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட திட்டத்தில், இரு அரசுகளின் ஒத்துழைப்புடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செயல்படுவதால் தான், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.