UPDATED : அக் 03, 2024 04:40 AM
ADDED : அக் 03, 2024 03:01 AM

ஜெருசலேம்: ஒரு பக்கம் உக்ரைன் - ரஷ்யா போர் நடந்து வருகிறது; மறுபக்கம், மேற்காசியாவில் கொந்தளிப்பான சூழ்நிலை உள்ளது. இவை மூன்றாம் உலகப் போருக்கு வித்திடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
உலக அளவில் அதிக அதிகாரம் யாருக்கு உள்ளது என்பதற்கான போட்டி தற்போது மிகவும் தீவிரமாக உள்ளது. ஒரு பக்கம் அமெரிக்காவும், மற்றொரு பக்கம் ரஷ்யா மற்றும் சீனாவும் தங்களை உலகின் அதிகாரமிக்க நாடுகளாக காட்டி வருகின்றன. இதற்கு அவர்களுக்கு உள்ள படைபலம், பொருளாதாரம் உள்ளிட்டவை சாதகமாக உள்ளன.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போர் இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும் நடந்து வருகிறது. இதனால், உலகெங்கும் பொருட்களுக்கான வினியோக சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன.
![]() |
ஹமாஸ் ஆட்சி
மேற்காசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு, ஏற்கனவே நீறு பூத்த நெருப்பாக இருந்த பிரச்னைதான்; தற்போது பெரிதாகியுள்ளது. இஸ்ரேல் -- பாலஸ்தீனம் இடையேயான மோதல் நீண்ட காலமாக உள்ளது. காசா, மேற்கு கரை உள்ளிட்ட பகுதிகளை, தனி பாலஸ்தீன நாடாக அறிவிக்க வேண்டும் என்பது, பாலஸ்தீன போராட்டத்தின் நோக்கம். ஆனால், இந்தப் பகுதிகளை, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றி, அதன் ஆட்சி நடக்கிறது.
கடந்தாண்டு அக்., 7ல், இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் துவங்கியது. தற்போது ஓராண்டை எட்ட உள்ளது. யூதர்கள் பெரும்பான்மையினராக உள்ள இஸ்ரேலுக்கும், முஸ்லிம்கள் அதிகம் உள்ள காசா பகுதிக்கும் இடையேயான இந்தப் போர், மதத்தின் பின்னணியைக் கொண்டது. ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு, அண்டை நாடான லெபனானை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு உள்ளது. இஸ்ரேலை அது தொடர்ந்து சீண்டி பார்த்து வந்தது.
![]() |
இதனால், ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது. லெபனானுக்குள் நுழையாமலேயே தன் தாக்குதல்களை நடத்தியது. ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளின், பேஜர் எனப்படும் தகவல் பரிமாறும் சாதனங்களை வெடிக்கச் செய்தது. மேலும், ஹெஸ்பொல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட முக்கிய தளபதிகளை துல்லியமாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொன்று குவித்தது.
ஹெஸ்பொல்லா அமைப்புக்கு ஈரானின் ஆதரவு உள்ளது. இதைத் தவிர, அந்தப் பிராந்தியத்தில் இருந்து செயல்படும் பல முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து, அவர்களை துாண்டி விட்டு வருகிறது ஈரான். இஸ்ரேல் - ஈரான் இடையே மறைமுகப் போர் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், இரண்டும் அண்டை நாடுகள் இல்லை என்பதால், பிரச்னை பெரிய அளவுக்கு தீவிரமாக இல்லாமல் இருந்தது.
![]() |
ஹெஸ்பொல்லா தலைவர் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் வகையில், தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஒரே நாளில், 180 ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது. இது உலகெங்கும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல்கள் மேலும் விரிவடையுமா, மூன்றாம் உலகப் போருக்கு வித்திடுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சமூக வலைதளத்தில், மூன்றாம் உலகப் போர் என்பது தற்போது பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 2 லட்சம் பேர் உட்பட உலகெங்கும் மூன்று லட்சம் பேர், சில மணி நேரங்களில் இது தொடர்பாக நேற்று பதிவிட்டுள்ளனர். தற்போதைய நிலையில், இஸ்ரேலுக்கு, அமெரிக்கா, மேற்காசியாவில் உள்ள சவுதி அரேபியா உள்ளிட்டவற்றின் ஆதரவு உள்ளது. அதே நேரத்தில், ஈரானுக்கு, ரஷ்யாவின் ஆதரவு உள்ளது. தற்போதுள்ள மோதல் உலகப் போராக மாறினால், ஈரானுக்கு, சீனாவும், வடகொரியாவும் ஆதரவு அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பின்புல ஆதரவு
அவ்வாறு மூன்றாவது உலகப் போர் துவங்கினால், அது மேற்காசியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதன் தாக்கம், இந்த ஆதரவு நாடுகளிலும் எதிரொலிக்கும். தற்போது உலகளாவிய பொருளாதார நிலை உள்ளிட்டவற்றை பார்க்கும்போது, எந்த ஒரு நாடும், இஸ்ரேலுக்கோ, ஈரானுக்கோ ஆதரவாக நேரடியாக களமிறங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
பின்புலத்தில் இருந்து தங்கள் தார்மீக ஆதரவை மட்டும் தெரிவிக்கும். அதனால், உலகப் போர் என்ற நிலைக்கு செல்லும் வகையில், இந்த மோதல் செல்லாமல் தடுப்பதற்கான முயற்சிகளும் நடக்கும் என, நிபுணர்கள் கூறுகின்றனர்.
பட்டா - 2 ஏவுகணை:
![]() |
ஹெச்.ஜி.வி., எனப்படும் ஹைப்பர்சோனிக் க்ளைடு வஹெிக்கிள் பொருத்தப்பட்ட பட்டா - 2 ஏவுகணைகள், எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை. பயணத்தின் போதே பாதையை மாற்றியமைக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணையில் திசை கட்டுப்பாட்டுக்காக, கோள வடிவ திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதில், பொருத்தப்பட்டுள்ள ஏரோ - டைனமிக் கட்டுப்பாட்டு மேற்பரப்புகள், இவற்றை வளிமண்டலத்தின் வெளியேயும் பறக்க உதவுகின்றன.
அயர்ன் டோம்: இஸ்ரேலின் கவசம்
இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ந்து 180 ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது. இதில், 90 சதவீதத்தை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியதாக, இஸ்ரேல் கூறியுள்ளது. உலக அளவில் தொழில்நுட்பத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றது இஸ்ரேல். குறிப்பாக அதன் ராணுவ கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளன.
![]() |
இஸ்ரேலின் மிகவும் நம்பிக்கைக்குரிய, 'அயர்ன் டோம்' எனப்படும் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பம் உலக பிரசித்தி பெற்றது. கடந்த 2007ல், காசா மலைப் பகுதியை ஹமாஸ் அமைப்பினர் கைப்பற்றிய அதே நேரத்தில், அயர்ன் டோம் முறையை இஸ்ரேல் கட்டமைத்தது. இஸ்ரேலின் ரபேல் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து இந்த பாதுகாப்பு கவச முறையை உருவாக்கியுள்ளன. முதல் முறையாக, 2011ல் இது பயன்படுத்தப்பட்டது. ஒரே நேரத்தில் பல முனைகளில் தாக்குதல் நடந்தாலும் சமாளிக்க முடியும். ஏவுகணைகள் மட்டுமல்லாமல், விமானம், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்களையும் தாக்க முடியும்.
வெறும், 90 கிலோ எடை உடையது என்பதால், எந்த இடத்துக்கும் இதை சுலபமாக எடுத்துச் செல்ல முடியும். தாக்குதல்களில் இருந்து தன் நகரங்களை காப்பதற்காக, இஸ்ரேல் இதை பயன்படுத்துகிறது. தரையில் இருந்து வானில், 4 முதல், 70 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் இதற்கு உண்டு.
இந்த அயர்ன் டோம் என்பது, மூன்று முக்கிய அம்சங்களை உடையது. முதலில் ரேடார் வாயிலாக, எதிரி நாட்டு ஏவுகணையை அடையாளம் காணும். இதையடுத்து அதில் உள்ள கண்காணிப்பு முறை செயல்பட்டு, தாக்குதலுக்கு தயாராகிறது. அதன்பின் இலக்கை நோக்கி, எதிர் தாக்குதல் நடத்தும் ஏவுகணை செலுத்தப்படுகிறது. அது துல்லியமாக தாக்கி, எதிரி ஏவுகணையை நடுவழியிலேயே அழித்து விடுகிறது.
எந்த நேரத்திலும், எந்த பருவநிலையிலும் எங்கும் இதை பயன்படுத்த முடியும். ஒரு ரேடார், கண்காணிப்பு அமைப்பு மற்றும் 20 எதிர்ப்பு ஏவுகணைகள் அடங்கியது, 'பேட்டரி' எனப்படுகிறது. ஒரு பேட்டரியின் விலை, 735 கோடி ரூபாய். ஆனால் ஒரு ஏவுகணையின் விலை, 37 லட்சம் ரூபாய் மட்டுமே. இதன் வாயிலாக நுாற்றுக்கணக்கான உயிர்கள் பலியாவது தடுக்கப்படுகிறது. மேலும், சொத்துகள் சேதமடைவதும் தடுக்கப்படுகிறது. இதுவரை, 2,400க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்கள், இந்த அயர்ன் டோம் வாயிலாக முறியடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.
![]() |
![]() |