சி.பி.ஐ., வசம் செல்லுமா கரூர் விவகாரம்? சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
சி.பி.ஐ., வசம் செல்லுமா கரூர் விவகாரம்? சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
ADDED : அக் 09, 2025 01:26 AM

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், சி.பி.ஐ., விசாரணை கோரிய மனுக்களை, உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
த.வெ.க., தலைவர் விஜய், கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ல், மேற்கொண்ட பிரசாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரி ழந்தனர்.
இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. மேலும், ஐ.ஜி., அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு விசாரணையும் நடந்து வருகிறது.
இந்நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் பிச்சமுத்து என்பவர், இந்த விவகாரத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல, பா.ஜ.,வைச் சேர்ந்த உமா ஆனந்தன் என்பவரும் சி.பி.ஐ., விசாரணை கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுக்களில், 'கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு நடத்தும் விசாரணையில் நம்பிக்கை இல்லை. இந்த விவகாரத்தில் அனைத்து தவறுகளும், அரசு நிர்வாகத்தின் தரப்பில் தான் இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்றால், சி.பி.ஐ., விசாரணை தேவை' என, கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை விரைவாக விசாரிக்குமாறு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், வரும், 10ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்தார்.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு விசாரணை குழுவை அமைத்த உத்தரவுக்கு எதிராகவும், நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும், த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தலைமை நீதிபதி அமர்வில், ஆதவ் அர்ஜுனா சார்பில் நேற்று ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, சி.பி.ஐ., விசாரணை கோரி, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மற்ற வழக்குகள், நாளை விசாரிக்கப்படும் நிலையில், அவற்றுடன் சேர்த்து, இந்த மனுவும் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
-டில்லி சிறப்பு நிருபர்-