UPDATED : பிப் 17, 2024 06:50 AM
ADDED : பிப் 17, 2024 02:39 AM

சென்னை: மத்திய அரசு சார்பில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
கடந்த, 2023 செப்., 1ல் துவங்கிய நடப்பு நெல் கொள்முதல் சீசனில், நேற்று முன்தினம் வரை, 11.43 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய சீசனில் இதே காலகட்டத்தில், 15.50 லட்சம் டன்னாக இருந்தது. 5 லட்சம் டன் நெல் குறைந்துள்ளதால், ரேஷன் கடைகளில் அரிசிக்கு தட்டுப்பாடு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'போதிய தண்ணீர் இல்லாததால், டெல்டா மாவட்டங்களில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டது. கிடங்குகளில் மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசி இருப்பு உள்ளது. இந்திய உணவு கழகத்திடம் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் அரிசி வருவதால், தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை' என்றார்.