ADDED : அக் 30, 2024 04:58 AM

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை மானிய விலையில் குறிப்பிட்ட எடையில், மாதம்தோறும் வழங்கப்படுகின்றன. ஒரு மாதம் வாங்காத பொருட்கள், அடுத்த மாதம் சேர்த்து வழங்கப்படாது.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பலரும் புத்தாடை வாங்குவது, சொந்த ஊர் செல்வது உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தியதால், ரேஷன் கடைகளில் இம்மாதம் பொருட்கள் வாங்கவில்லை. எனவே, இம்மாதம் பொருட்கள் வாங்காதவர்கள், அடுத்த மாதம் சேர்த்து வாங்கிக் கொள்ள அனுமதிக்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கார்டுதாரர்கள் கூறியதாவது: இரு வாரங்களுக்கு முன், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில், கனமழை பெய்தது. கடந்த இரு நாட்களாக, தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், வீட்டை விட்டு வெளியேற முடியாததால், ரேஷனில் பொருட்கள் வாங்கவில்லை.
அடுத்து தீபாவளி காரணமாகவும், கடைகளுக்கு செல்ல முடியவில்லை. எனவே, இம்மாத ரேஷன் பொருட்களை, அடுத்த மாதம் சேர்த்து வாங்கிக் கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.