கொள்ளைக்காரர்களிடம் அடிபணிவோமா? காங்., போஸ்டரால் அதிர்ச்சி
கொள்ளைக்காரர்களிடம் அடிபணிவோமா? காங்., போஸ்டரால் அதிர்ச்சி
UPDATED : பிப் 22, 2026 07:44 PM
ADDED : பிப் 21, 2026 05:03 AM

மதுரை: விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர், 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என தொடர்ந்து வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டும், பேட்டி அளித்தும் வருகிறார்.
காங்., பொதுச்செயலர் வேணுகோபால், சமீபத்தில் சென்னை வந்து, 'ஆட்சியில் பங்கு கோஷம் என்பது கட்சியின் நிலைப்பாடு அல்ல. தனிநபர்களின் கருத்து. கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசினால், அவர்கள் மீது கட்சித் தலைமை கடும் நடவடிக்கை எடுக்கும்' என எச்சரித்துவிட்டுச் சென்றார்.
இதையடுத்து, தி.மு.க., தலைமைக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக பேட்டியளித்து வந்த காங்கிரசார், சற்று அடங்கினர்.
இந்நிலையில், தி.மு.க.,வை வம்பிழுக்கும் வகையில் மறைமுகமாக விமர்சித்து, காங்கிரஸ் தரப்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட காங்கிரஸ் சார்பில் கூத்தியார் குண்டு சக்கரவர்த்தி அம்பலம் என்பவர், மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டியுள்ள போஸ்டர்களால், தி.மு.க.,வினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
'வெள்ளைக்காரனையே விரட்டிய காங்கிரஸ்... இந்த கொள்ளைக்காரனிடம் அடிபணிவோமா?'- என்ற வாசகங்களுடன் அச்சடிக்கப்பட்ட அந்த போஸ்டரில் காங்., தலைவர்கள் ராகுல், சோனியா, மாணிக்கம் தாகூர் படங்கள் இடம் பெற்றுள்ளன. ஒட்டப்பட்ட சில மணி நேரங்களில், அந்த போஸ்டர்களை ஒரு தரப்பினர் கிழித்து எறிந்தனர்.

