UPDATED : மார் 31, 2025 06:13 AM
ADDED : மார் 31, 2025 12:59 AM

சென்னை: அ.தி.மு.க., மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு, 'ஒய் பிரிவு' பாதுகாப்பு வழங்குவது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடன், அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் பழனிசாமி, கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலருடன் டில்லி சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
அவர் தமிழகம் திரும்பிய நிலையில், கடந்த 28ம் தேதி, அ.தி.மு.க., மூத்த தலைவர் செங்கோட்டையன், தனியே டில்லி சென்றார்.
அங்கு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது, செங்கோட்டையன் தனக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தாக கூறப்படுகிறது. மத்திய புலனாய்வு அமைப்பான, ஐ.பி., அதிகாரிகள், செங்கோட்டையனுக்குள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து விசாரித்து, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.
அதன் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம், செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.