கூண்டு வச்சீங்களே...உணவு வச்சீங்களா? சிறுத்தையை பிடிக்க வனத்துறை காமெடி
கூண்டு வச்சீங்களே...உணவு வச்சீங்களா? சிறுத்தையை பிடிக்க வனத்துறை காமெடி
ADDED : மார் 30, 2025 06:22 AM

வால்பாறை: வால்பாறையில் சிறுத்தையை பிடிக்க வனத்துறை வைத்த கூண்டில், ஆறு ஆண்டுகளாக சிறுத்தை சிக்கவில்லை.
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. ஆறு ஆண்டுகளுக்கு முன், வால்பாறை நகரை ஒட்டியுள்ள நடுமலை எஸ்டேட்டில் கூலி தொழிலாளியாக இருந்த அசாம் மாநில தொழிலாளியின், 3 வயது சிறுவனை சிறுத்தை கவ்விச் சென்று கொன்றது.
தொடர்ந்து, சிறுத்தை நடமாடும் நடுமலை, வால்பாறை நகரில் வனத்துறையினர், கேமரா பொருத்தி, கூண்டு வைத்தனர். வாழைத்தோட்டம், சிதம்பரனார் நகர் பகுதியில் சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில், இன்று வரை சிறுத்தை சிக்கவில்லை. நாள் தோறும் சிறுத்தை அந்த பகுதியில் வலம் வருகிறது. இதனால் சுற்றுலா பயணியரும், உள்ளூர் மக்களும் பீதியடைந்துள்ளனர்.
மக்கள் கூறியதாவது:
எஸ்டேட் பகுதியில் மட்டுமே சிறுத்தைகள் இருந்தன. தற்போது, மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகரிலும் உலா வருகின்றன. சுற்றுலா பயணியர் அதிகளவில் தங்கி செல்லும் நிலையில், பகல், இரவு நேரத்தில் சிறுத்தைகள் ஹாயாக நடந்து செல்கின்றன.
வால்பாறை நகரில் நகைக்கடை வீதி, கோ-ஆப்ரெடிவ் காலனி, புதுமார்க்கெட், வாழைத்தோட்டம், காமராஜ் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 10க்கும் மேற்பட்ட சிறுத்தைகள், குட்டிகளுடன் உலா வருகின்றன.
வாழைத்தோட்டம் பகுதியில் சிறுத்தையை பிடிக்க ஆறு ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட கூண்டில், சிறுத்தைக்கு உணவாக எதுவும் வைப்பதில்லை. மக்களை சமாளிக்க கண் துடைப்புக்காக வனத்துறையினர் கூண்டு வைத்து பாவ்லா காட்டி வருகின்றனர்.
இவ்வாறு, கூறினர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நடுமலை எஸ்டேட் பகுதியில் சிறுவனை கொன்ற சிறுத்தையை பிடிக்க, இரண்டு இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால், வால்பாறை நகரில் வைக்கப்பட்ட கூண்டு அகற்றப்படவில்லை. சிறுத்தையை பிடிக்க மீண்டும் கூண்டு தேவைப்படும் என்பதால், அந்த இடத்தில் கூண்டு அகற்றப்படாமல் உள்ளது. சிறுத்தையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், கூண்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்' என்றனர்.