/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை துவக்கம்
/
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை துவக்கம்
ADDED : மார் 25, 2024 05:01 AM
புதுச்சேரி, காரைக்காலில் 15,093 பேர் எழுதுகின்றனர்
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் 49 தேர்வு மையங்களில் நாளை துவங்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 15,093 மாணவர்கள் எழுத உள்ளனர்.
புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடந்து முடிந்தது.
பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4ம் தேதி துவங்கி இன்று 25ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
புதுச்சேரி அரசு பள்ளிகளில்10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு தவிர்த்து மற்ற அனைத்து வகுப்புகளும் சி.பி.எஸ்.இ., பாட திட்டம் அமல்படுத்தப்பட் டுள்ளது.
இதனால் பிளஸ் 1 பொதுத் தேர்வை புதுச்சேரி காரைக்காலில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமே எழுதி வருகின்றனர்.
அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு கடந்த 13ம் தேதி துவங்கிய ஆண்டு தேர்வு நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.
இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை 26ம் தேதி துவங்குகிறது. முதல் நாள் மொழிப்பாட தேர்வும், 28ம் தேதி ஆங்கிலம், ஏப்., 1ம் தேதி கணக்கு, 4ம் தேதி அறிவியல், 8 ம் தேதி சமூக அறிவியல் பாட தேர்வு நடக்கிறது.
காலை 10:00 மணிக்கு துவங்கும் தேர்வு மதியம் 1:15 மணிக்கு நிறைவு பெறுகிறது. முதல் 15 நிமிடங்கள் வினாத்தாள் படிக்கவும், விபரங்களை சரிபார்க்க ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக, 37 மையங்களில் 6,452 மாணவர்களும், 6,161 மாணவிகள், காரைக்காலில் 12 மையங்களில் 1,233 மாணவர்களும், 1247 மாணவிகள் என, மொத்தம் 49 மையங்களில், 15,093 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
மாணவர்கள் மொபைல் போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை எடுத்து வர கூடாது. ஹால் டிக்கெட் இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

