/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
11 மணி நேரம் 'பவர் கட்': பொதுமக்கள் அவதி
/
11 மணி நேரம் 'பவர் கட்': பொதுமக்கள் அவதி
ADDED : ஜூலை 26, 2024 04:10 AM
திருக்கனுார்: தேத்தாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக காலை 10:00 மணிக்கு நிறுத்தப்பட்ட மின் விநியோகம் மீண்டும் இரவு 9:00 மணிக்கு மேல் வழங்கப் பட்டதால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
மண்ணாடிப்பட்டு தொகுதி தேத்தாம்பாக்கம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, கைக்கிலப்பட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் அமைந்துள்ள உயர் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணிக்காக நேற்று காலை 10:00 மணிக்கு மின்விநியோகம் தடை செய்யப்பட்டது.
இதையடுத்து, மின்துறை ஊழியர்கள் உயர் மின்னழுத்த பாதையில் இடையூராக இருந்த மரத்தின் கிளைகளை அகற்றி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். பணிகள் முடிந்து மாலை 5:00 மணிக்கு மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், பராமரிப்பு பணிகள் முடிந்து மீண்டும் மின்விநியோகம் வழங்கும் நேரத்தில் துணை மின்நிலைய பவர் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக மாலை 5:00 மணிக்கு வழங்க வேண்டிய மின் விநியோகம் இரவு 9:00 மணிக்கு மேல் தான் மீண்டும் வழங்கப்பட்டது.
இதனால், காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை 11 மணி நேரம் மின்தடை நிலவியதால், அக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.