/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சட்டசபையில் ரூ.12,700 கோடிக்கு வரியில்லாத பட்ஜெட் தாக்கல்: இலவச அரிசி திட்டம் துவங்கப்படுவதாக அறிவிப்பு
/
புதுச்சேரி சட்டசபையில் ரூ.12,700 கோடிக்கு வரியில்லாத பட்ஜெட் தாக்கல்: இலவச அரிசி திட்டம் துவங்கப்படுவதாக அறிவிப்பு
புதுச்சேரி சட்டசபையில் ரூ.12,700 கோடிக்கு வரியில்லாத பட்ஜெட் தாக்கல்: இலவச அரிசி திட்டம் துவங்கப்படுவதாக அறிவிப்பு
புதுச்சேரி சட்டசபையில் ரூ.12,700 கோடிக்கு வரியில்லாத பட்ஜெட் தாக்கல்: இலவச அரிசி திட்டம் துவங்கப்படுவதாக அறிவிப்பு
ADDED : ஆக 03, 2024 04:36 AM

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையில் ரூ.12,700 கோடிக்கு வரியில்லாத பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். மீண்டும் இலவச அரிசி வழங்கப்படும். மானிய விலையில் பருப்பு, கோதுமை வழங்கப்படும். மீனவர் தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்படும். பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தக பை, ஷூ வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
புதுச்சேரி 15வது சட்டசபையின் 5வது கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடரை கவர்னர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து உரையாற்றினார். இரண்டாம் நாளான 1ம் தேதி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.,க்கள் பேசினர்.
3வது நாளான நேற்று சட்டசபை காலை 9:00 மணிக்கு கூடியது. சபாநாயகர் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்து, 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்படி அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2024--25ம் ஆண்டுக்கான ரூ.12,700 கோடி ரூபாய்க்கான வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 9:05 மணிக்கு பட்ஜெட் உரையை பேச தொடங்கிய அவர், 10:20 மணிக்கு நிறைவு செய்தார்.
பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்த முக்கிய திட்டங்கள்:
l குடிமை பொருள் வழங்கல் துறையில் பொது விநியோக அமைப்பின் தொழில்நுட்பம் நவீனமயமாக்கல் மற்றும் சீர்திருத்தங்களுக்கான திட்டமான ஸ்மார்ட்-பி.டி.எஸ்., நடப்பு நிதியாண்டில் முதல் புதுச்சேரியில் செயல்படுத்தப்படும். உணவு தானியம் விரயமாகுதலை தடுக்க இது முன்னோடி முயற்சி.
l இந்த நிதியாண்டு முதல் இலவச அரிசி வழங்கப்படும். மானிய விலையில் பருப்பு கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் உணவு பொருட்கள் வழங்கபடும். புதிய ரேஷன் கார்டு வழங்கல், பெயர்களை சேர்த்தல், நீக்குதல், ரேஷன் கார்டுகளை ஒப்படைத்தல் உள்ளிட்ட அனைத்து சேவைகளை பொது சேவை மையம் மூலமாகவே இனி செய்யலாம்.
l அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச புத்தக பைகள், ஷூ வழங்கப்படும். பிராந்திய அளவில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முறையே 20 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும். மேலும் பாடபிரிவு வாரியாக 100க்கு 100 மதிப்பெண் பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகை வழங்கப்படும்.
l மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை 6,500 ரூபாயில் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதேபோல் மழைக்கால நிவாரணமாக தற்போது வழங்கப்பட்டு வரும் 3 ஆயிரம் ரூபாய் 6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டு கூடுதலாக 9 கோடி ரூபாய் செலவாகும்.
l புதிதாக 500 மீனவ பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம், 1,856 மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம், 1,831 மீனவ குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க உத்தேசித்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு 3.26 கோடி கூடுதலாக செலவாகும்.
l பதிவு செய்யப்பட்ட அனைத்து வகையான மீன்பிடி படகுகளுக்கு 60 சதவீதம் மானிய விலையில் மீன்பிடி சாதனங்களான வலை, கயிறுகள் வாங்க மானியமாக 1 கோடி ஒதுக்கப்படும். கட்டுமர மீனவர்களுக்கு உதவும் பொருட்டு, 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்யப்பட்ட மோட்டார் பொருத்தாத கட்டுமர உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். விபத்தின்போது ஏற்படும் சேதங்களை முழுமையாக பெறுவதற்கு படகுகளுக்கு செலுத்தப்படும் காப்பீட்டு சந்தாவில் 90 சதவீதம் மானியமாக வழங்கும் குழு காப்பீட்டு திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது.
l மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்களுக்கு டீசல் மானியம் லிட்டருக்கு 12 ரூபாய் வழங்குவது போல் பதிவு செய்யப்பட்ட வெளிப்புற இயந்திரம் பொருத்தப்பட்ட மீன்பிடி படகு உரிமையாளகளுக்கு டீசல் மானியம் லிட்டருக்கு 12 ரூபாய் வழங்கப்படும்.
l சேதராப்பட்டில் 2.73 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய ஆரம்ப சுகாதார நிலையம், தட்டாஞ்சாவடி, கலிதீர்த்தாள்குப்பத்தில் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் புதிய சுகாதார துணை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
l காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்கு புதிதாக கட்டடம் கட்டப்படும். புதுச்சேரி பிராந்தியத்தில் ஆயுஷ் மருத்துவ பூங்கா ஒன்று நிறுவப்படும். மேலும் ஆயுர்வேதம், சித்த மருந்துகள் உற்பத்தி பிரிவினை நடப்பாண்டு துவங்கப்படும்.
l அனைத்து கடற்கரை கிராமங்களிலும் சுகாதாரத்தை பராமரிக்க பொதுகழிப்பறை கட்டப்பட்டு, அந்தந்த கிராம மீனவர் அல்லது மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்திடம் ஒப்படைத்து பராமரிக்கப்படும். இதற்காக 20 லட்சம் நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்படும்.
l மத்திய அரசின் பிரதமர் கிசான் உர்ஜா சுரக் ஷா ஏவம் உத்தான் மகாபியன் திட்டத்தின் கீழ் சூரிய சக்தியில் இயங்கும் பம்ப்செட் நிறுவ அளிக்கப்படும் 30 சதவீத மானியம், 100 சதவீதமாக வழங்கப்படும். இதன்மூலம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் ஆண்டுதோறும் செலவிடப்படும் 5.500 கோடி நிதி சுமை குறையும்.
l ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் முதல்வரின் புதுமை பெண் எனும் புதிய திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பணிபுரியும் பெண்கள் மற்றும் கல்லுாரி மாணவிகள் 500 பேருக்கு, மின்சார ஸ்கூட்டர் வாங்குவதற்கு வாகன விலையில் 75 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
l சுற்றுலாத்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் தீம் பார்க், தங்கும் விடுதிகள், உணவகங்கள், நல மையங்கள் உள்ளிட்ட சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளுடன் மணப்பட்டு பகுதியில் பல்நோக்கு சுற்றுலா மையம் அமைக்க டெண்டர் விடப்படும்.
l புதுச்சேரி கடற்கரை தெற்கு பகுதியில் கடல் அரிப்பை தடுக்க ரூ. 60 கோடியில் கடல் அரிப்பு தடுப்பு அரண் அமைக்கப்படும்.
l நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ. 30.50 கோடி மதிப்பில் 1 எம்.எல்.டி., கொள்ளவு கொண்ட 7 உவர் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
l லாஸ்பேட்டை பழுதடைந்த அரசு ஊழியர் குடியிருப்பிற்கு பதிலாக ரூ. 100 கோடி மதிப்பில் புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.
l காரைக்காலில் உள்ள கருவேல மரங்களை அழித்து மீண்டும் சாகுபடிக்கு ஏற்றவாறு நிலத்தினை தயார் செய்ய மானியமாக ெஹக்டெருக்கு 15 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
l கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வது தொடர்பாக நிர்வாக விதிமுறைகளில் ஒருமுறை தளர்வு அளித்து, விண்ணப்பங்களை பரிசீலிக்க ஒப்பீட்டு சேவை பயன் கொள்கையை உருவாக்க அரசு ஆராய்ந்து வருகிறது. செயல்படாத நிறுவனங்களின் மனித வளம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகாண உகந்த முயற்சி மேற்கொள்ளப்படும்.
அரசு நிதி பற்றாக்குறை, மொத்த உற்பத்தி மதிப்பு, கடன்விகிதம் போன்ற நிதிநிலை குறியீடுகளை வரையறைக்குள் பராமரித்து வருகிறது. கடந்த நிதியாண்டை காட்டிலும் நடப்பு நிதியாண்டில் மூலதன செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நலிவுற்றோர், மகளிர், இளைஞர்கள், குழந்தைகள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம்.
சம்பளங்கள், ஓய்வூதியங்கள், கடனை திருப்பி செலுத்துதல், வட்டி போன்ற செலவினங்கள் உயர்ந்து வருகிறது.
எனவே வளர்ச்சி சார்ந்த செலவினங்களுக்கு தேவையான நிதி ஆதாரம் கண்டறிய வழிமுறைகளை ஆராய அரசு உறுதி பூண்டுள்ளது. இதன்மூலம் ஆட்சிப்பரப்பின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சியடைவதுடன், வேலைவாய்ப்பும் பெருகும்.
மாநிலத்தின் வருவாய், கணிசமான அளவில் உயரும். இதனால் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தி சமூக பொருளாதார முன்னேற்றம் அடைய முடியும்.
இவ்வாறு முதல்வர் பட்ஜெட்டில் தெரிவித்தார்.