/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாண்டி மெரினா நிர்வாகத்தை கண்டித்து சோனாம்பாளையத்தில் 3 மணி நேரம் மறியல்
/
பாண்டி மெரினா நிர்வாகத்தை கண்டித்து சோனாம்பாளையத்தில் 3 மணி நேரம் மறியல்
பாண்டி மெரினா நிர்வாகத்தை கண்டித்து சோனாம்பாளையத்தில் 3 மணி நேரம் மறியல்
பாண்டி மெரினா நிர்வாகத்தை கண்டித்து சோனாம்பாளையத்தில் 3 மணி நேரம் மறியல்
ADDED : செப் 14, 2024 06:08 AM

புதுச்சேரி: பாண்டி மெரினா நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து சோனாம்பாளையம் சந்திப்பில் நடந்த 3 மணி நேர சாலை மறியலால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
வம்பாக்கீரப்பாளையம் கடற்கரையில் புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை மூலம், வணிக வளாகம் (பாண்டி மெரினா) கட்டப்பட்டு, இயக்குதல் மற்றும் பராமரிக்கும் பணி, 10 ஆண்டுகளுக்கு தனியார் நிர்வாகத்திற்கு அரசு வழங்கி உள்ளது.
பாண்டி மெரினா நிர்வாகம் மீனவர் பயன்படுத்தும் நில பகுதிகளை ஆக்கிரமித்து பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்க விரிவாக்கம் செய்வதாகவும், பாண்டி மெரினா விதிமீறல்கள் குறித்து கடிதம் அளித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை கண்டித்து சோனாம்பாளையம் சந்திப்பில் வம்பாக்கீரப்பாளையம் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவ பஞ்சாயத்து தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். சம்பவ இடத்திற்கு வந்த அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், மீனவர்களுக்கு ஆதரவாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.
சோனாம்பாளையம் சந்திப்பில் 4 பக்க சாலைகளையும் மறித்து போராட்டம் நடந்ததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டகாரர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வர வேண்டும் என போராட்டத்தை தொடர்ந்தனர்.
சப்-கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் கொட்டாரு, தாசில்தார் பிரத்வீ, மீன்வளத்துறை, சுற்றுலாத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மெரினாவிற்கு வரும் பலர் கஞ்சா பயன்படுத்துவதால், பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. சுற்றுலா பயணிகள் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
எனவே, பாண்டி மெரினா எங்களுக்கு தேவையில்லை என வலியுறுத்தினர். மீனவ மக்கள் அளித்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து போராட்டத்தை மீனவர்கள் விலக்கி கொண்டனர். காலை 10:15 மணிக்கு துவங்கிய போராட்டம் மதியம் 1:20 மணிக்கு முடிந்தது. 3 மணி நேரம் நடந்த போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.