/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அழகிய கடற்கரையில் மறைந்திருக்கும் ஆபத்து
/
அழகிய கடற்கரையில் மறைந்திருக்கும் ஆபத்து
ADDED : மே 05, 2024 04:21 AM

புதுச்சேரிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே செல்கிறது. புதுச்சேரியில் கனகசெட்டிக்குளம் துவங்கி, முள்ளோடை புதுக்குப்பம் வரை 31 கி.மீ., நீளத்திற்கு அழகிய கடற்கரை உள்ளது.
இதில், பழைய சாராய ஆலை துவங்கி, சீகல்ஸ் ஓட்டல் வரை உள்ள ப்ரோமனட் கடற்கரை, பேரடைஸ் கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரைகள் பிரபலமானது. சுனாமிக்கு பின் ப்ரோமனட் கடற்கரையில் பாறைகள் கொட்டப்பட்டதால், மணல் பரப்பு மாயமானது.
புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக, ரூ. 25 கோடி செலவில் இரும்பினால் செய்யப்பட்ட கூம்பு வடிவ அமைப்பு தலைமை செயலகம் எதிரில் கடலில் அமைத்த பின், செயற்கை மணல் பரப்பு உருவாகியது. சுற்றுலா பயணிகள் கடற்கரை மணல் பரப்பில் விளையாடி, கடலில் இறங்கி குளித்து மகிழ்கின்றனர்.
கடல் நீரோட்டம், அலைகளின் சீற்றம் காரணமாக அழகிய புதுச்சேரி கடற்கரை ஆபத்தான கடற்கரையாக திகழ்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் கடலில் இறங்கி குளித்தபோது, பெரியக்கடை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 22 பேர், ஒதியஞ்சாலைக்கு உட்பட்ட பகுதியில் 27 பேர், வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் 8 பேர், பேரடைஸ் கடற்கரையில் 10 பேர் என மொத்தம் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி குளிக்கும்போது உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனால், கடலில் குளிக்கும்போது அலையில் சிக்குவோரை காப்பாற்றுவதற்காக, சுற்றுலா துறை மூலமாக லைப் கார்டுகள் ( உயிர் காப்பாளர்கள்) நியமிக்கப்பட்டனர்.
தினசரி 8:00 மணி வேலைக்கு ரூ. 390 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. ஷிப்ட் அடிப்படையில் நீச்சல் தெரிந்த மீனவ இளைஞர்கள் பணி அமர்த்தப்பட்டனர். சம்பளம் குறைவாக உள்ளது என கூறி லைப் கார்டுகள் பணியை புறக்கணித்து சென்று விட்டனர். இதனால் கடற்கரையில் தற்போது லைப் கார்டுகள் யாரும் இல்லை.
போலீசார் ஒலி பெருக்கி மூலம் கடலில் குளிக்க வேண்டாம் என எச்சரிப்பதை யாரும் கண்டுகொள்வதில்லை.
இதனால், கடந்த 4 நாட்களுக்கு முன், 25 வயது வாலிபர், தலைமை செயலகம் எதிரே கடலில் மூழ்கி உயிரிழந்தார். கடலில் மூழ்குவதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்.