மாநில நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைகளை அனுப்ப அறிவுரை
மாநில நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைகளை அனுப்ப அறிவுரை
ADDED : ஜூலை 26, 2026 08:11 PM
புதுச்சேரி: நல்லாசிரியர் விருதுக்கான பரிந்துரைகளை பள்ளி முதல்வர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வித் துறை அதிகாரிகளுக்கு துணை இயக்குனர் காவேரி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
புதுச்சேரியில், பள்ளி கல்வித் துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது–4, முதல்வர் சிறப்பு விருது–7, கல்வியமைச்சரின் வட்டார விருது –10 என, மொத்தம், 21 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நல்லாசிரியர்களை தேர்வு செய்ய ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விருதினை பெற 2025ம் ஆண்டு, டிசம்பர் 3ம் தேதி வரை 15 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் கொண்ட ஆசிரியர்கள், 20 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் கொண்ட தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் தகுதியானவர்கள். ஓய்வு பெற்றவர்களுக்கு விருது வழங்கப்படுதில்லை.
ஆனால், விருது வழங்கப்படும் ஆண்டில், குறைந்தது 4 மாதங்கள் பணிபுரிந்த ஆசிரியர்கள், அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி, செய்து விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும். பள்ளி தலைவர் தகுதியான ஆசிரியர்களை பரிந்துரை செய்ய வேண்டும். ஆசிரியர்கள் நேரடியாக விண்ணப்பிக்க அனுமதியில்லை. தேர்வுக்குழு கலந்துரையாடலில், விளக்க காட்சியை சமர்ப்பிக்கலாம். பள்ளி தலைவர்கள் ஆக., 10ம் தேதிக்குள் தங்களை பரித்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
