புதுச்சேரி விளையாட்டு மைதானங்களில் ஒப்பந்த பணியாளர்கள் நியமனம்
புதுச்சேரி விளையாட்டு மைதானங்களில் ஒப்பந்த பணியாளர்கள் நியமனம்
ADDED : ஜூன் 10, 2026 07:31 PM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு விளையாட்டு மைதான பாதுகாப்பு பணியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தனியார் நிறுவன ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் உள்ளிருப்பு மற்றும் திறந்தவெளி மைதானங்களின் பராமரிப்பு பணிகளுக்கு போதிய பணியாட்கள் இல்லாமல் பல ஆண்டுகளாக விளையாட்டு மைதானங்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பின்றி இருந்து வருகின்றன.
அதைத்தொடர்ந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், புதுச்சேரியில் உள்ள உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், லாஸ்பேட்டை பல்நோக்கு உள்ளிருப்பு மைதானம், தவளகுப்பம் பள்ளி அருகில் உள்ள மினி மைதானம், பாகூர் மினி மைதானம், லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானம், எல்லைப்பிள்ளைச் சாவடியில் புதிதாக திறக்கப்பட்ட அரசு நீச்சல் குளம் உள்ளிட்டவைகளுக்கு 34 தனியார் நிறுவன செக்யூரிட்டிகள், துப்புரவு பணியாளர்கள் 15 பேர், நீச்சல் குளத்திற்கு லைப் கார்டு –1, உள்பட மொத்தம் 50 பேர் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விளையாட்டு ஆணையத்தின் கீழ் பணியாற்றும் விளையாட்டு ஒப்பந்த பயிற்சியாளர், தினக்கூலி ஒப்பந்த ஊழியர், பல்நோக்கு ஊழியர், நிரந்தர பணியாளர் ஆகியோருக்கு மார்ச் மாதம் முதல் சம்பளம் வழங்காததால், ஊழியர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
