/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் தேனாறும், பாலாறும் ஓடுகிறதா?
/
புதுச்சேரியில் தேனாறும், பாலாறும் ஓடுகிறதா?
ADDED : ஏப் 08, 2024 06:27 AM

புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
புதுச்சேரியில் முதல்வராக இருப்பது ரங்கசாமி. அவர்கள் கூட்டணியில் ரங்கசாமியின் கட்சி தான் பெரியது. புதுச்சேரியில் ஒரு லோக்சபா தொகுதி தான் உள்ளது. அதிலும், பா.ஜ., தான் போட்டியிடும் என ரங்கசாமி வாயால் சொல்ல வைத்து விட்டனர்.
ரங்கசாமி தனிக்கட்சி ஆரம்பிக்க காரணமே நமச்சிவாயம் தான். ஆனால், விதி இப்போது நமச்சிவாயத்துக்கு ஓட்டு கேட்டு வரும் நிலைமையை ரங்கசாமிக்கு உருவாக்கி, அந்த கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பது தான் ஜனநாயகமா என்ற கேள்வி எழுகிறது. ரங்கசாமியை டம்மியாக உட்கார வைத்துவிட்டு, பா.ஜ., பம்மாத்து ஆட்சியை நடத்துகிறது.
தேர்தல் வந்தால் மட்டும் தான், ரங்கசாமிக்கு மாநில அந்தஸ்து பற்றி நினைவுக்கு வரும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி கட்சி ஆட்சிக்கு வந்தால் தேனாறும், பாலாறும் ஓடும் என்றனர்.
புதுச்சேரியில் ஓடுகிறதா என்ற கேள்வி வருகிறது. புதுச்சேரி மக்கள் போராடி பெற்ற உரிமையை, மோடி அரசு பறிக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறார் ரங்கசாமி. மோடி அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு, புதுச்சேரி மக்கள் பலியாகி விடக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.

